மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக களமிறங்கும் நடிகர் வடிவேலு: வெளியான தகவல்


மக்களவை தேர்தலில் திமுக சார்பில் நடிகர் வடிவேலு வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு. படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் வடிவேலு இல்லாத மீம் உலகமே கிடையாது என்றளவுக்கு சமூகவலைதள உலகில் மிக பிரபலமாக இருக்கிறார்.

கடந்த 2011ஆம் ஆண்டு வரையில் வடிவேலு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வந்தார், அவர் நடித்த படங்கள் எல்லாமே பெரிய வெற்றி பெற்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது திரை வாய்ப்புகள் குறைந்து போனதற்கு காரணம் அவர் திமுகவுக்கு ஆதரவாக கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் பிரசாரம் செய்தது தான் என இன்றளவும் பலரால் கூறப்படுவதுண்டு.

கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமும் அவர் பட வாய்ப்புகள் இல்லாமலேயே இருந்த நிலையில் மீண்டும் நடிப்பில் பிசியாகி உள்ளார். இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற வடிவேலு இது சமாதி இல்லை, சன்னதி என கூறினார். மேலும் கலைஞரின் தீவிர பக்தன் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வடிவேலுவை திமுக சார்பில்  போட்டியிட வைக்கலாமா என்பது குறித்து அக்கட்சி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலுவும் இதற்கு சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது