கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு இந்தியர்களுக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசாங்கம் கோரிக்கை : நிராகரித்ததாக டக்ளஸ் தெரிவிப்பு
இலங்கை கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்காக இந்தியர்களுக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழக கடல்வளத்துறை அமைச்சரிடம் தொலைபேசியில் உரையாடிய போது இந்த விடயத்தை தாம் நிராகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் குறித்த தொலைபேசி உரையாடலின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை இலங்கை கடற்பகுதியில் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு தமிழக கடற்றொழில் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார் எனவும், எனினும் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடலுக்குள் வரமாட்டார்கள் என தமிழக அரசு உறுதியளித்த பின்னரே கடற்றொழில் விவகாரம் குறித்து விவாதிக்க முடியும் என தாம் கூறியதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்திய – இலங்கை கடற்றொழில் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான கோரிக்கைக்கு இந்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.