“எனது உடல், எனது தெரிவு” வாசகத்துடன் ஈபிள் கோபுரம் விசேடமாக ஒளிர்வு
பிரான்ஸின் அரசமைப்பில் கருக்கலைப்புச் சுதந்திரம் காங்கிரஸ் அமோக வாக்கு
Kumarathasan Karthigesu-பாரிஸ்
உலகில் முதலாவது நாடாகக் கருக்கலைப்புச் சுதந்திரத்தை நாட்டின் அரசமைப்புச் சட்டத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட சுதந்திரங்களில் ஒன்றாக அரசமைப்பில் உட்சேர்த்திருக்கிறது (include abortion in the Constitution) பிரான்ஸ்.
பெண்களது உரிமைக் குரல்களுடன் சுமார் இருபது ஆண்டுகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த அரசியல் முயற்சி இன்றைய தினம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானமாக நாட்டின் நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது.
கர்ப்பத்தை நிறுத்துவதற்கான பெண்களது சுதந்திரம் அரசமைப்பில் இணைக்கப்படுவதைக் குறிக்கின்ற நேறறைய நாளின் முக்கியத்துவத்தை ஒட்டிப் பாரிஸின் முக்கிய அடையாளச் சின்னமாகிய ஈபிள் கோபுரம் நேற்றிரவு முழுவதும் மணிக்கு ஒரு தடவை விசேடமாகப் பிரகாசித்து ஒளிரவிடப்பட்டது. கோபுரத்தின் முதல் தளத்தில் “எனது உடல் எனது தெரிவு” என்று அர்த்தம் தருகின்ற “MonCorpsMonChoix” அல்லது “my body my choice” என்ற பிரபல கருக்கலைப்பு உரிமை வாசகம் பல மொழிகளிலும் ஒளிரவிடப்பட்டிருந்தது.
படம் :பாரிஸ் வேர்சாயில் (Versailles) உள்ள காங்கிரஸ் அவை…..
கருக்கலைப்புச் சுதந்திரத்தை உள்வாங்குவதற்கான அரசமைப்பு மீளாய்வு மீது வாக்களிப்பதற்காக நாடாளுமன்றத்தின் இரு சபைகளது உறுப்பினர்களும் வேர்சாயில் (Versailles) உள்ள காங்கிரஸ் மண்டபத்தில் ஒன்று கூடினர்.
நாட்டின் ஐந்தாவது குடியரசின் அரசமைப்பில் இவ்வாறு ஒரு மீளாய்வைச் செய்வதற்கு நாட்டின் சட்ட மன்றம் மற்றும் செனற் சபை இரண்டையும் சேர்ந்த 925 உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பங்கினரது ஆதரவு – அதாவது 555உறுப்பினர்களது வாக்குகள் – போதும் என்ற நிலையில், 780 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 72 உறுப்பினர்கள் மாத்திரம் எதிராகவும் வாக்களித்திருக்கின்றனர்.
கருக்கலைப்பு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலே இன்னமும் குற்றச் செயலாகக் கருதப்பட்டு வழக்குகள் இடம்பெறுகின்ற நிலையில் பெண்களின் அந்தச் சுதந்திரம் ஒரு நாட்டில் அரசமைப்பின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்ட முதலாவது நிகழ்வை உலகெங்கும் பெண் அமைப்புகள் ஆரவாரமாக வரவேற்றுள்ளன.