சைபர் தாக்குதல்! CAF பயனாளர்கள் அனைவரும் தங்கள் கடவுச் சொற்களை மாற்றுமாறு பணிப்பு.
ஊடுருவல் மோசடியை தடுக்குமாறு அறிவிப்பு
Kumarathasan Karthigesu-பாரிஸ்
குடும்ப நல உதவிக் கொடுப்பனவுகளை வழங்கும் அரச நிறுவனமாகிய Caisse nationale d’allocations familiales( CAF) அதன் பயனாளர்கள் அனைவருக்கும் விடுத்துள்ள ஓர் அறிவித்தலில் தங்கள தங்கள் இணையக் கணக்குகளுக்கான கடவுச் சொற்களை (mot de passe) உடனடியாக மாற்றிக் கொள்ளுமாறு கட்டாயமாகப் பணிக்கப்பட்டுள்ளது.
மார்ச் எட்டாம் திகதிக்கு முன்னராகப் புதிய – பாதுகாப்பான – கடவுச் சொற்களை மாற்றிக் கொள்ளாதவர்கள் தங்கள் கணக்குகளைத் திறந்து பயன்படுத்த முடியாதிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
CAF நிறுவனத்தின் இணையத் தளம் மீது இந்த மாத நடுப்பகுதியில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான பயனாளர்களது கணக்குகளுக்குள் ஊடுருவல் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. நான்கே நான்கு பயனாளர்களது கணக்குகள் மாத்திரமே திருடப்பட்டன என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் பல ஆயிரக்கணக்கான கணக்குகளுக்குள் முறைகேடாக உள் நுழைவு இடம்பெற்றிருக்கலாம் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.
இணைய ஊடுருவல் குழு ஒன்று (group of hackers) ஆறு லட்சத்துக்கும் அதிகமான CAF பயனாளர்களது கணக்குகளை ஊடுருவிக் கைப்ப்பற்றியுள்ளதாகப் பெப்ரவரி 12 ஆம் திகதி அறிவித்திருந்தது.
இந்த ஊடுருவல் காரணமாக குடும்பங்களுக்குக் கொடுப்பனவு வழங்கும் பணிகள் தடைப்பட மாட்டாது. ஆயினும் புதிய கடவுச் சொற்களை இட்டுக்கொள்ளாத பயனாளிகள் தங்கள் கணக்குகளுக்குள் உட்பிரவேசிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்களது தரவுகள் திருடப்படுவதால் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட இடமில்லை. ஆயினும் பயனாளர்களது வங்கிக் கணக்கு இலக்கங்களை மோசடியாக மாற்றிப் புதிய இலக்கங்களைச் சேர்த்து அதன் மூலம் கொடுப்பனவுகளை முறைகேடாக மாற்றிச் சுவீகரிக்க ஊடுருவல்கரர்கள் (hackers) முயற்சிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
CAF நிறுவனத்தின் இணையத் தளம் தாக்கப்படுவதற்கு முன்னராக மருத்துவக் காப்புறுதி வழங்குகின்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்குள் ஊடுருவிய நபர்கள், சுமார் 33 மில்லியன் பயனாளர்களது மருத்துவக் காப்புறுதி அட்டை இலக்கங்களைக் (Numéros de carte Vitale) கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.