உக்ரைனுக்குத் தரைப் படைகள்! மக்ரோனின் கருத்தால் சர்ச்சை.
ரஷ்யா வெற்றிபெற முடியாது அதை உறுதிப்படுத்த எதுவும் செய்வோம் என்கிறார் அவர் கள நிலைவரம் மேற்குக்கு எதிராகத் திரும்புகின்றதா?
Kumarathasan Karthigesu-பாரிஸ்
உக்ரைனுக்கு மேற்கு நாடுகளது தரைப் படைகளை அனுப்புவது குறித்து இன்னமும் ஒருமித்த இணக்கப்பாடு இல்லை என்ற போதிலும் அதனைப் புறந்தள்ளிவிடக் கூடாது என்று அதிபர் மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.
இதில் மூலோபாயத் தெளிவின்மை இருப்பதை ஒத்துக்கொள்கிறேன். எனினும் படைகளை அனுப்புவதற்குப் பிரான்ஸ் ஆதரவாக இல்லை என்று கூறுவதற்கில்லை. இந்தப் போரில் ரஷ்யா வெற்றிபெற முடியாது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம்.
-இவ்வாறு அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
உக்ரைனுக்கு உதவும் மாநாடு எலிஸே மாளிகையில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றது. 27 நாடுகளது முன்னிலையில் நடைபெற்ற அந்த மாநாட்டின் முடிவில் உரையாற்றுகையிலேயே மக்ரோன் இவ்வாறு பரபரப்பான கருத்தை வெளியிட்டிருக்கிறார். அவரது கருத்து சர்வதேச அளவில் ராஜீக மட்டங்களில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து மூண்ட போர் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் களத்தில் ரஷ்யப்படைகள் முன்னேற்றத்தை எட்டியுள்ளன. உக்ரைன் தரப்பில் அதன் படைகளில் பெரும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சில முன்னரங்க நகரங்களைக் கைவிட்டுப் படைகள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் பெருவாரியான ஆயுத தளபாடங்களை அள்ளி வழங்கி வந்ததன் மூலம் உக்ரைன் படைகள் களத்தில் எதிரியைச் சளைக்காமல் எதிர்கொண்டு வந்தன. தற்சமயம் படைகளில் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேற்குலக ஆயுத உதவிகளிலும் ஒரு வித தொய்வு நிலை தோன்றியுள்ளது.
இவ்வாறான ஒரு போர்க்கள நிலைவரத்தின் மத்தியிலேயே தரைப் படைகளை அங்கு அனுப்புவது தொடர்பான பரபரப்பான கருத்தை மக்ரோன் சர்வதேச பிரதிநிதிகள் பங்குபற்றிய ஒரு முக்கிய மாநாட்டில் வெளியிட்டிருக்கிறார்.
பிரான்ஸின் அதிபர் மக்ரோன் போர் ஆரம்பித்த காலங்களில் உக்ரைனைப் பாதுகாக்கின்ற
அதேசமயம் அதிபர் புடினுடன் இடைவிடாத தொடர்பைப் பேணி வருகின்ற கொள்கையைக் கடைபிடித்து வந்தார். மொஸ்கோவுக்கும் கீவுக்கும் இடையே பிரான்ஸ் சமாதான நடுநிலை நாடு என்பது போன்ற தோற்றத்தையே அவர் தனது கருத்துக்களில் வெளிப்படுத்தியும் வந்தார். பின்னர் உக்ரைனுக்கு ஏவுகணைகள் உட்படப் போராயுதங்களை வழங்குவதை அதிகரித்த அவர், புடினுடனான நேரடித் தொடர்பில் இருந்து மெல்ல மெல்ல வெளியேறியிருந்தார்.
உக்ரைனுக்குப் படைகளை அனுப்புகின்ற விடயத்தில் அமெரிக்கா உட்பட முக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பொதுவான இணங்கப்பாடு நிலவவில்லை. இந்த நிலையில் ஏன், எதற்காக மக்ரோன் தற்போது திடீரெனப் பிரான்ஸின் போக்கில் கடுமையை வெளிப்படுத்துகிறார் என்ற கேள்வியைச் சர்வதேச பாதுகாப்பு நிபுணர்களை எழுப்பியுள்ளனர்.
உக்ரைன் கள நிலைவரம் மேற்கு நாடுகளுக்குப் பாதுகாப்பற்றதாக மாறி வருகின்றதன் அறிகுறியே அது என்று அவர்களில் சிலர் கருதுகின்றனர்.
பிரான்ஸுக்கும் உக்ரைனுக்கும் இடையே புதியதொரு பாதுகாப்பு உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. அதில் ஒப்பமிடுவதற்காக அதிபர் ஷெலென்ஸ்கி சில தினங்களுக்கு முன்னர் பாரிஸ் வந்து திரும்பியிருந்தார். அந்த உடன்படிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு விடப்படும் என்று எலிஸே மாளிகை இன்று அறிவித்துள்ளது.