இந்திய பிரதமர் மோடியின் அழுத்தம்: இந்தியாவின் அதானி குழமத்தின் கைகளுக்கு செல்லும் பூநகரி காற்றாலை திட்டம்.
இலங்கையின் வட மாகாணத்தில் பூநகரி காற்றாலை மின்சக்தி திட்டத்தில் 355 மில்லியன் டொலர் முதலீட்டை மேற்கொள்ளும் அதானி கிறீன் எனேஜி லிமிட்டடட் இன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிலைபேறான வலுசக்தி அதிகாரசபை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இந்த திட்டம் காற்றாலை மின்சக்தி திட்டமாக அமைவதோடு மட்டுமல்லாமல் மின்சக்தி நெருக்கடி, பொருளாதாரம், சூழல் நிலைபேறான தன்மை போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் வகையில் அமைய உள்ளது. இலங்கையின் மிகப்பெரிய காற்றாலை மின்சக்தி திட்டமாக இது இருக்கும் என்பதுடன், இப்பிராந்தியத்தில் நிலைபேறான வலுசக்தியின் முக்கிய புள்ளியாக மாறும் என இலங்கை அரசாங்கம் தெரிவிக்கிறது.
234மெகா வற்ஸ் திறன் கொண்ட இத்திட்டம், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திறனுக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் என்றும் அரசாங்கம் கூறுகிறது. காற்றாலை மின்சக்தியானது, தூய்மையான மற்றும் பசுமையான பண்புகளை கொண்டது என்றும் அரசாங்கம் கூறுகிறது காபன் வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகளுடன் இந்தத் திட்டம் ஒத்துப் போகின்றது. திட்டத்தில், சூழலைப் பாதுகாப்பதில் அதானி கிறீன் எனேஜி கொண்டுள்ள அர்ப்பணிப்பு தெளிவாகத் தென்படுகிறது. இது தூய்மையான மற்றும் நிலைபேறான எதிர்காலத்திற்கு வழி ஏற்படுத்துகிறது என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதானி குழுமத்துக்கு வடக்கின் சில திட்டங்களை கையளிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்ததாக அண்மையில் சில செய்திகள் வெளியாகியிருந்தன. குறிப்பாக மன்னார் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை மோடியால் விடுக்கப்பட்டதாக எதிர்ப்புகள் வெளியாகியிருந்த பின்புலத்திலேயே இத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.