இங்கிலாந்து பேராசிரியைக்கு அழைப்பு விடுத்த கர்நாடகா: திருப்பி அனுப்பிய மத்திய அரசு.

காங்கிரஸ் அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்த நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு லண்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக பேராசிரியை நிதாஷா கவுல் குற்றம் சாட்டியுள்ளார்.

இங்கிலாந்தின் லண்டனில் உள்ளது வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர் நிதாஷா கவுல். இவர் கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் பெங்களூருவில் ஆளும் காங்கிரஸ் அரசின் சமூக நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒற்றுமை மாநாடு’ நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டார்.

கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா தனக்கு அனுப்பிய அழைப்பின் நகல் மற்றும் நிகழ்ச்சிக்கான தனது பதிவு விவரங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துகொண்ட நிதாஷா கவுல், ‘எங்களால் எதுவும் செய்ய முடியாது, டெல்லியில் இருந்து உத்தரவு’ என்பதைத் தவிர, குடியேற்ற அதிகாரிகள் எனக்கு எந்த காரணமும் தெரிவிக்கவில்லை. எனது பயணம் கர்நாடகா அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு என்னிடம் அதிகாரப்பூர்வ கடிதம் இருந்தது. நான் உள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டேன் என்று டெல்லியில் இருந்து எனக்கு முன்கூட்டியே எந்த அறிவிப்பும் அல்லது தகவலும் கொடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.