வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது பாரிஸ் ஈபிள் கோபுரம் ஞாயிறு முதல் மீளத் திறக்கப்படும்

பார்வையாளரிடம் மன்னிப்புக் கோரல் கட்டணம் மீளளிப்பு

Kumarathasan Karthigesu-பாரிஸ்
வேலை நிறுத்தம் காரணமாக மூடப்பட்டிருந்த ஈபிள் கோபுரம் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் மீளத் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈபிள் கோபுரத்தை நிர்வகித்து வருகின்ற கம்பனியின் பணியாளர்கள் கடந்த ஆறு நாட்களாக மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தம் காரணமாகவே கோபுரம் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டிருந்தது. இந்த நாட்களில் கோபுரத்தைப் பார்வையிட வந்து அதன் கதவுகள் மூடப்பட்டதால் ஏமாற்றமடைந்தவர்களிடம் நிர்வாகம் மன்னிப்புக் கோரியுள்ளது. பெப்ரவரி 19 முதல் வேலை நிறுத்தக் காலப்பகுதிக்குள் பார்வையிடப் பெறப்பட்ட நுழைவுச் சீட்டுக்களுக்கான கட்டணங்கள் மீளளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நகரசபையின் மேற்பார்வையின் கீழ் இயங்குகின்ற Société d’Exploitation de la Tour Eiffel (Sete)என்ற நிறுவனமே உலகப் புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தின் பராமரிப்பு நிர்வாகம் மற்றும் நிதி முகாமைத்துவம் போன்ற பணிகளுக்குப் பொறுப்பாக உள்ளது. அதன் பணியாளர்களை உள்ளடக்கிய தொழிற்சங்கத்தினரே வேலை நிறுத்தத்தில் குதித்திருந்தனர். கோபுரத்தின் பராமரிப்பு, நிதி நிர்வாகங்களில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதனால் பாரிஸின் உலக அதிசயமாகிய இரும்புச் சீமாட்டி பலவீனமடைந்து வருவதாகவும் தொழிலாளர்கள் தரப்பில் அதிருப்தியும் ஆட்சேபமும் வெளியிடப்பட்டு அதற்காகவே அவர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாகக் கோபுரத்தைப் பார்வையிடவும் அதில் ஏறுவதற்காகவும் வருகைதந்திருந்த லட்சக் கணக்கான உல்லாசப் பயணிகள் ஏமாற்றமடைய நேரிட்டது.

வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாடு ஒன்று கோபுரத்தை நிர்வகிக்கின்ற நிறுவனத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே எட்டப்பட்டுள்ளது. அதன்படி – கோபுரத்தின் முதலீடு, வருமானம், தொழில்துறை, நிர்வகிப்பு போன்றவற்றைக் கிரமமான ஒரு ஒழுங்கில் மதிப்பாய்வு செய்வதற்குச் சபை ஒன்று நிறுவப்படவுள்ளது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை இந்தச் சபை ஒன்று கூடிப் பெறுபேறுகளை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் கோபுரத்தின் திருத்த வேலைகள், பராமரிப்புப் பணிகளுக்காக 2031 ஆம் ஆண்டு காலப் பகுதி வரை 380 மில்லியன் ஈரோக்களைச் செலவிடுவதற்கும் நிர்வாகத்தினரும் தொழிலாளர்களும் இணக்கம் கண்டுள்ளனர்
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">