கம்யூனிஸப் போராளி மிசாக் மனோச்சியன் பாரிஸ் பந்தியோனில் வைத்து மதிப்பளிப்பு.
இனக்கொலையில் தப்பிய ஆர்மீனிய அனாதைக்குப் புகலிட தேசத்தில் கிடைத்த மகோன்னத மரியாதை...
படம் :பாரிஸ் பந்தியோன் கல்லறை நினைவாலயம். இது நகரின் ஐந்தாவது நிர்வாகப் பிரிவில் லத்தீன் வட்டகையில் அமைந்துள்ளது. பிரான்ஸின் வரலாற்றில் – பண்பாட்டில் அதி உன்னதமானவர்கள் எனக் கருதப்படுகின்ற 81 பேரது கல்லறைகள் இங்குள்ளன. அவர்களில் ஆறு பேர் பெண்கள். மனோச்சியன் தம்பதிகள் இருவரதும் பேழைகளை நினைவாலயத்தின் உள்ளே எடுத்து வருகின்ற “pantheonization” எனப்படும் முக்கிய நிகழ்வில் பிரான்ஸின் பிரதான அரசியல் பிரமுகர்கள் அனைவரும் கட்சி பேதம் இன்றிக் ஒன்றாகக் கலந்துகொண்டனர். அதிபர் மக்ரோன் அங்கு அஞ்சலி உரையாற்றினார்.
1934 இல் மனோச்சியன் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். தனது எதிர்கால மனைவி மெலினியை அங்கேயே அவர் சந்தித்தார்.கம்யூனிஸ்ட் எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினரானார். பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றுக்குப் பொறுப்பாசிரியராக விளங்கிய அவர் கொல்லப்படும் தறுவாயில் எழுதிய கவிதைகள் இன்றும் புகழ் மிக்க படைப்புகளாக விளங்குகின்றன.