இலங்கை விரைவில் இந்தியாவின் 29ஆவது மாநிலமாக மாறும் என கூறிய கருத்தால் சர்ச்சை.


சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெரண்டான்டோ கடந்தவாரம் மும்பாயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஆற்றிய உரை தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவரது உரையின் ஒற்றை வார்த்தையால் கடும் போக்கு சிங்கள அமைப்புகளும், தேசியவாதிகளும் கொதிப்படைந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன், ஹரின் பெர்ணான்டோவின் அமைச்சுப் பதவியை பறித்து அவரை தூக்கிலிட வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகின்றனர்.ஹரின் பெர்ணான்டோ ஆற்றிய உரையில் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்ற வார்த்தையை குறிப்பிட்டிருந்தார்.

அதற்கான அர்த்தம் என்னவென்பதை அவர் வெளிப்படுத்தவில்லை. இந்நியைில்,  இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீசும் எலும்புத் துண்டுகளுக்காக அவரின் கைப்பாவையாக மாறியுள்ளனர்.’ எனக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அமைச்சர் ஹரினுக்கு எதிராக கடும் தொனியில் கருத்துகளை வெளியிட்டார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் மீண்டு வருவதாக ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். எம்மை பொறுத்தமட்டில் இது மீண்டுவரும் பயணமல்ல. சிக்கலில் தள்ளும் பயணமாகும். அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தில் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியென கூறியிருந்தார். அது தவறுதலாக கூறப்பட்ட விடயமல்ல. ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பட தெரிவிக்கப்பட்ட கருத்தாகும் எனத் தெரிவித்தார்.

69 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொண்டு நாடாளுமன்றம் வந்த பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இந்த அனைத்து விடயங்களையும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பொரலுகொட சிங்கங்கள் எனக் கர்ஜித்த பிரதமர் தினேஸ் குணவர்தன, இந்த அநியாயம் நடைபெறுவதை பூனைக் குட்டி போல் பார்த்துக்கொண்டிருக்கிறார். ராஜபக்சர்களும் இதற்கு துணைபோகின்றனர். டெலிகொம் நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்க உள்ளனர். மின்சார சபையை துண்டு துண்டாக உடைத்து இந்தியாவுக்கு வழங்க உள்ளனர். மன்னார் காற்றாலையை வழங்குகின்றனர். மார்ச்சில் எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திட உள்ளனர். எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் சுதந்திர வர்த்தக உருவாகும் என்பதுடன், இந்திய வர்த்தகர்கள் தடையின்றி நாட்டுக்குள் வர முடியும்.

நாட்டின் அனைத்து தொழில்துறைகளும் அவர்கள் வசமாகும். இலங்கை விரைவில் இந்தியாவின் 29ஆவது மாநிலமாக மாறும். அதனைதான் ஹரின் கூறுகிறார்.’ என்றார். விமல் வீவரங்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய உறவை பேணியவராகும். ஆனால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் ஏற்பட்ட முறுகல்கள் காரணமாக ராஜபக்சர்களுடனான நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்து விமல் விலகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.