ஆறம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கு கடிதம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டரக்கிற்கு ஆறம்சக்கோரிக்கைளை முன்வைத்து வடக்கு,கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

குறித்த கடிதத்தில் நேற்றுடன் 2257ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடர்ச்சியாக தாம் முன்னெடுத்து வருவதோடு, 37ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு முதல் தொடரும் அனைத்து அமர்வுகளிலும் நேரடியாக பிரசன்னமாகி நீதிக்கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றபோதும் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்கு,கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி,மற்றும் செயலாளர் லீலாவதி ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொக்குத்தொடுவாய் உட்பட, தமிழர் தாயகம் எங்கும் காணப்படும் மனிதப்புதைகுழு அகழ்வுப்பணி, எச்சங்கள் பாதுகாப்பு, விசாரணை என்பன ஐ.நா அல்லது சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் நடைபெற்று உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும்.

எமது உறவுகள் சரணடைந்த, கையளிக்கப்பட்ட காவலரண்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள், அந்நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு எமது உறவுகளின் நிலை அறியப்படுவதோடு அதற்குக் காரணமானவர்கள் சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

உள்ளகப்பொறிமுறைகளை முற்றுமுழுதாக நாம் நிராகரித்துள்ள நிலையில் எமது பங்களிப்புபின்றி வேறு பொறிமுறைகளைக் கொண்டுவர முயற்சித்து மேலும் காலத்தை இழுத்தடிக்க வேண்டாம் என்பதை மன்றாட்டமாக அனைத்து தரப்பினரையும் வேண்டுகின்றோம். ஏற்கனவே பதினைந்து ஆண்டுகள் கடத்தப்பட்டு விட்டது என்பதை மிகவும் மனவேதனையுடன் ஞாபகப்படுத்துகின்றோம்.

ஐ.நா.அதிகாரிகளின் முன்மொழிவுகளுக்கு அமைவாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவும், 2009இல் நடந்த போரின் இறுதி ஆறு மாதங்களில் ஏறக்குறைய எழுபதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டமை, ஐ.நா உள்ளக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைக்குழந்தைகள் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். போர் முடிவடைந்து 14ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இவ்வினவழிப்பினையும் போர்க்குற்றங்களையும் நடாத்திய ஒரு பாதுகாப்பு;படை அதிகாரிகளோ அல்லது அரசியல் தலைவர்களோ நீதியை எதிர்கொள்ளவில்லை. மனித உரிமைகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர் உட்பட பல ஐ.நா.அதிகாரிகள் பரிந்துரைத்தது போல இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது உறவுகள் வலிந்து காணாமலாக்கப்பட்டமைக்கும், காரணமான ஆக்கிரமிப்பு இலங்கை இராணுவம் எமது தாயகத்தில் தொடர்ச்சியாக நிலைகொண்டுள்ளது. இந்த இராணுவத்தின் பிரசன்னம் எம்மை தொடர்ச்சியாக பீதி நிலையிலேயே வைத்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பு இராணுவம் எமது தாயகத்திலிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

இலங்கை இராணுவத்தின் அனுரசணையுடன் அரச இயந்திரங்களான தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப்பாதுகாப்பு திணைக்களம், நிலவள திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பொளத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை இலங்கை அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது.

வட,கிழக்கில் உள்ள சுமார் 200இற்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் ஆலயங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. அத்துடன் தமிழர் தாயகம் எங்கிலும் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டும் அமைக்கப்படுவத்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறான நில அபகரிப்புகளும், பௌத்த சிங்கள மயமாக்கல்களும் உடனடியாக நிறுத்தப்பட்டு காணிகள் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட வேண்டும்.

இந்த தீவில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வின்றி தொடர்கதையாகவே உள்ளது. இனவழிப்பும், இனவன்முறையும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. தமிழ் மக்களை இனவழிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீள நிகழாமையை உறுதி செய்யவும் நிரந்தர அரசியல் தீர்வு அவசியம். தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும் சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் தெரிவு அறியப்பட வேண்டும். இதில் சர்வதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.