புடின் எதிர்ப்பாளர் துருவச் சிறையில் திடீரென மரணம்!

கிரெம்ளின் ஆட்சியை அஞ்சாமல் எதிர்த்தவர் நஞ்சூட்டித் தப்பியவர்

Kumarathasan Karthigesu-பாரிஸ்
மேற்கில் கண்டனங்கள் ரஷ்யாவில் பேரணிகள்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பிரதான அரசியல் எதிர்ப்பாளராக விளங்கிய அலெக்ஸி நவால்னி (Alexeï Navalny) அவர் அடைக்கப்பட்டிருந்த கொடுஞ்சிறையில் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது மர்ம மரணத்தை அடுத்து ரஷ்யாவிலும் மேற்கு நாடுகளிலும் கண்டன வீதிப் பேரணிகள் தொடங்கியுள்ளன.

47 வயதான நவால்னி மீது தீவிரவாதக் குற்றம் சுமத்தப்பட்டு அவருக்குப் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. நாட்டின் வடக்கே வட துருவப் பகுதியில் (Arctic Circle) கொடூர குற்றவாளிகளை அடைக்கின்ற சிறைக்கு நவால்னி அண்மையில் இடமாற்றப்பட்டிருந்தார். மொஸ்கோவில் இருந்து ஆயிரத்து 900 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள “சிறப்புக் குடியிருப்பு” (“special regime colony”) எனப்படும் அந்தச் சிறையிலேயே அவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார் என்று ரஷ்யாவின் சிறைச்சாலை நிர்வாக சேவை அறிவித்திருக்கிறது.

ஆண்டு முழுவதும் -30C உறை பனிக் குளிர் நிலவுகின்ற ஆட்டிக் வட்டம் பகுதியில் “துருவ ஓநாய்” (Polar Wolf) என்று அழைக்கப்படுகின்ற சிறையின் அமைவிடம்.

சிறைக் கூண்டுக்கு வெளியே நடந்து சென்ற சமயம் அவர் திடீரென மயங்கி வீழ்ந்து பின்னர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவரது குடும்பத்தினர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
சுமார் இருபது ஆண்டுகளாக எதிர்க் கட்சிகளை ஒழித்துக் கட்டி அதிகாரத்தில் நீடித்துவருகின்றார் புடின். அவரது அடுத்த பதவிக் காலத்துக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே நாட்டுக்குள் அவரது நம்பர் ஒன்று அரசியல் எதிர்ப்பாளராகக் கருதப்பட்ட நவால்னி மர்மமாக உயிரிழந்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு ரஷ்யாவில் மர்மமாக நோவிச்சோக் (Novichok) என்ற கொடிய நஞ்சு மூலம் அவரைக் கொல்ல நடந்த முயற்சியில் உயிர் பிழைத்திருந்த நவால்னி, அதற்காக ஜேர்மனியில் தங்கிச் சிகிச்சை பெற்று மீண்டும் நாடு திரும்பியிருந்தார். அதன் பிறகு பல்வேறு உடல் உபாதைகளுடன் பலவீனமான நிலையிலேயே சிறையில் காலங்கழித்து வந்தார்.

நெதர்லாந்து, போலந்து, ஜேர்மனி போன்ற நாடுகளின் முக்கிய நகரங்களில் நவால்னிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் கலந்துகொண்டவர்கள் “புடினே கொலையாளி” எனக் கோஷமிட்டு ள்ளனர்.

ரஷ்யர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய முக்கிய அரசியல் பிரமுகரான நவால்னியின் மரணத்துக்குப் புடினே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சுமத்தியுள்ளார். மேற்கு நாடுகளில் அமைந்துள்ள ரஷ்யத் தூதரகங்களுக்கு வெளியே கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன. ரஷ்யாவின் பல நகரங்களில் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற நூற்றுக்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">