சீனா இங்கு தொடர்ந்து நிலைகொள்வதை நாங்கள் விரும்பவில்லை-சுமந்திரன்.

“இந்து சமுத்திரத்திலே இந்தியாவின் பாதுகாப்பு என்பது நியாயமானது. ஆகவே, சீன ஆக்கிரமிப்பையும் சீனா இங்கு தொடர்ந்து நிலைகொள்வதையும் நாங்கள் விரும்பவில்லை” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரை நேற்று (16) இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

“இங்கு இருக்கக்கூடிய விசேட பிரச்சினைகள் குறித்து இந்திய தூதரருடன் கலந்துரையாடி இருக்கின்றோம். இந்திய மீனவர் பிரச்சினை சம்பந்தமாக அவரிடம் குறிப்பிட்டிருந்தேன்.

அது பற்றி தான் இந்தியப் பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் ஒன்று எழுதி இருப்பதாகவும் இது விரைவிலே தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளார் எனவும் இந்தியத் தூதுவர் கூறினார்.

வடக்கில் இருக்கக்கூடிய சீன கடலட்டைப் பண்ணைகள் மூலம் மீனவர்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படுகின்றது. இதனைப் பற்றி யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது கவலையளிப்பதாகத் தூதுவர் தெரிவித்தார்.

எங்களுடைய மீனவர்கள் கடலிலே தங்கள் தொழிலை செய்ய முடியாத அளவுக்குக் கடற் படுக்கைகள் சீனாவின் கடலட்டைப் பண்ணைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்பதனை அவருக்கு நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

சீனாவின் வருகை சம்பந்தமாக நாங்கள் பகிரங்கமாக எங்கள் நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றோம். நாடாளுமன்றத்தில் கூட அது பற்றி பேசி இருக்கின்றேன்.

இலங்கை தென் சீனக் கடலிலே இருந்திருக்குமாக இருந்தால் நாங்கள் சீனாவினுடைய பாதுகாப்பைப் பற்றி கரிசனை கொண்டிருப்போம்.

ஆனால், இலங்கை இருப்பதோ இந்தியாவில் இருந்து 30 கிலோமீற்றர் அருகிலே, இந்து சமுத்திரத்திலே. இந்தியாவின் பாதுகாப்பு என்பது நியாயமானது.

ஆகவே, நாங்கள் சீன ஆக்கிரமிப்பையும் சீனா இங்கு தொடர்ந்து நிலைகொள்வதையும் விரும்பவில்லை என்பதனை இந்தியத் தூதுவருக்கு உறுதிப்படத் தெளிவாகச் சொல்லி இருக்கின்றேன்.

இந்தியத் தூதுவருடான இந்தச் சந்திப்பு மிகவும் ஆரோக்கியமானதாகவும் வெளிப்படைத் தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது..

எங்களுடைய கரிசனைகள், அவர்களுடைய கரிசனைகள் இந்த இரண்டையும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டவர்களாக ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகச் செயற்பட வேண்டும் என்ற கருத்துக்கு உடன்பட்டிருக்கின்றோம்.” – என்றார்.