காலுறைகளுக்குள் பல்லிகளைக் கடத்தி வந்தவர் பாரிஸில் கைது!
Gare de l'Est நிலையத்தில் சுங்கப் பரிசோதனையில் 21 உயிரினங்கள் சிக்கின
Kumarathasan Karthigesu-பாரிஸ்
ஜேர்மனியில் இருந்து பாரிஸ் வந்தடைந்த ரயில் பயணி ஒருவரது பயணப் பெட்டியில் இருந்து ஊர்வன வகையைச்சேர்ந்த 21 உயிரினங்கள் உயிரோடு மீட்கப்பட்டிருக்கின்றன.
பாரிஸ் கிழக்கு ரயில் மையமாகிய Gare de l’Est ரயில் நிலையத்தில் சுங்கத் துறைக் கண்காணிப்பாளர்கள் அந்தப் பயணியை மறித்துச் சோதனையிட்டபோது அவரது பயணப் பெட்டியின் உள்ளே காணப்பட்ட நீண்ட காலுறைகளுக்குள் உயிரினங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது. அழிந்துவருகின்ற காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களைக் கடத்தும் சர்வதேச வர்த்தகத்தைத் தடுப்பதற்கான வோஷிங்டன் உடன்படிக்கையின் கீழ் (Washington Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) பாதுகாக்கப்படுகின்ற கொம்புப் பல்லிகள் (horned lizards) இரண்டே முதலில் மீட்கப்பட்டன. பின்னர் ஃபிஜி உடும்புகள் (Fiji iguanas) உட்பட அவை போன்ற 21 அரிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பாதுகாப்பாகப் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டன என்று சுங்கத் துறை விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரினங்களைக் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டுப் பாரிஸ் நீதி நிர்வாகப் பொலீஸ் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் இது போன்ற கடத்தல்களில் மொத்தம் 52 ஆயிரம் அரிய வகை உயிரினங்கள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 400 உயிரினங்கள் உயிருடன் மீட்கப்பட்டிருந்தன.