தெரிவுக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது பழிவாங்கும் செயல்-பாட்டலி சம்பிக்க ரணவக்க
அரசுக்கு ஆரம்பத்தில் இருந்து பில்லியன் கணக்கில் இலாபத்தை பெற்றுக்கொடுத்த பாராளுமன்ற வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது பழிவாங்கும் செயல் என பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சாராய முதலாளிகளும், சீனி கொள்ளையர்களும் அரசியல்வாதிகளை தமது கைப்பாவைகளாக பயன்படுத்தி தன்னை அந்த பதவியில் இருந்து நீக்கியுள்ளனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய அக்கிராசன உரையின் போது, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்ககட்சியின் உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்த போது தான் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் அமர்ந்து இருந்தே இதற்கு காரணம் எனவும் சம்பிக்க கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்கிராசன உரையை நிகழ்த்துவதற்காக அண்மையில் பாராளுமன்றத்திற்கு வந்தார்.
ஜனாதிபதி உரையை ஆரம்பிக்கும் போது, எதிர்க்கட்சி தலைவரும், எதிர்க்கட்சியின் அமைப்பாளரான லக்ஷ்மன் கிரியெல்லவும் சபையில் இருந்த எழுந்து சென்றனர்.
அதற்கு மறுநாள் ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பான விவாதம் நடந்தது. அதில் உரையாற்ற நானும் நேரத்தை ஒதுக்குமாறு கேட்டிருந்தேன்.
நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல் நாள் எனக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் எனக்கு நேரம் வழங்கப்படவில்லை.
ஏன் எனக்கு நேரத்தை ஒதுக்கவில்லை என நான் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் கேட்டேன். ஜனாதிபதி அக்கிராசன உரையின் போது வெளிநடப்புச் செய்யாது, சபையில் இருந்தவர்களுக்கு விவாதத்தில் உரையாற்ற நேரத்தை ஒதுக்க வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் கூறியதாக தெரிவித்தார்.
நாங்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்கள் எங்களை பற்றிய தீர்மானங்களை எதிர்க்கட்சி தலைவர் எப்படி எடுக்க முடியும் என நான் கேட்டேன்.
நான் சுயாதீனமான உறுப்பினர் என்பதால், எதிர்க்கட்சி தலைவரால் அப்படி செய்ய முடியாது. ஜனாதிபதியின் உரையை புறக்கணிக்க போவதாக ஏன் முன்கூட்டியே அறிவிக்கவில்லை என கேட்டேன்.
தலைவர் எழுந்து செல்லும் போது அவருக்கு பின்னால் எழுந்து செல்ல வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும் என கிரியெல்ல கூறினார்.
எவருக்கும் அடிமையாக இருக்க நாங்கள் தயாரில்லை. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே அரச நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு உட்பட இரண்டு தெரிவுக்குழுக்களின் தலைவர் பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன்.
இதன் பின்னணியில் சாராய முதலாளிகளும், சீனி இறக்குமதி மோசடியாளர்களும் இருக்கின்றனர்.
திருட்டு சாராய முதலாளிகளின் கொள்ளை, சீனி வரி ஏய்ப்பாளர்கள்,வரி செலுத்தவர்கள் குறித்து தகவல்களை வெளியிட்டதன் காரணமாக பழிவாங்கும் நோக்கில் இதனை செய்துள்ளனர்.
ரஞ்சன் ராமநாயக்க கூறுவது போல் இவர்கள் எல்லோரும் நண்பர்கள்.
நாட்டின் மதுபான போத்தல்களில் இருக்கும் போலி ஸ்டிக்கர் ஒட்டப்படும் மோசடியை நாங்கள் வெளியில் கொண்டு வந்தோம்.
இதனால்,அரசின் வருமான பில்லியன் கணக்கில் அதிகரித்தது. இறுதியில் என்ன நடந்தது, மதுவரி திணைக்கள ஆணையாளருக்கு வீட்டுக்கு செல்ல நேரிட்டது.
அத்துடன் நாட்டுக்கு பல பில்லியன் ரூபா பணத்தை சம்பாதித்து கொடுத்த எனக்கும் தெரிவுக்குழுக்களின் தலைவர் பதவி இல்லாமல் போனது.
ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் வருமான வரி செலுத்தாத ஆயிரத்து 272 பேர் இருக்கின்றனர். இந்த பட்டியலை வெளியிட்ட பின்னர், அதில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த அமைச்சர் ஒருவர் ஆத்திரப்பட்டார்.
இதனால் எனது பதவி பறிக்கப்பட்டுள்ளது எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளார்.