பிரான்ஸில் மரண தண்டனையை இல்லாதொழிக்கப் போராடிய மூத்த அரசியல்வாதி காலமானார்.

தேசிய அஞ்சலி ஏற்பாடு தலைவர்கள் இரங்கல்

Kumarathasan Karthigesu-பாரிஸ்
தலைவெட்டும் கருவிக்கு முடிவு கட்டப் பாடுபட்டவர், ஓரினச் சேர்க்கையைக் குற்றமற்றதாக்கியவர்.
 
செப்ரெம்பர் 18,1981 இல் பிரான்ஸின் சட்ட மன்றம் மரணதண்டனையை இல்லாதொழிக்கும் சட்டத்தை வாக்களித்து நிறைவேற்றியது. கடும் போராட்டத்தின் பின்னர் அந்தச் சட்ட மூலத்தைத் தயாரித்து அதனை மன்றில் நிறைவேற்றப் பாடுபட்டவர் அப்போதைய நீதி அமைச்சர் ரொபேர் பெடன்ரர் (Robert Badinter). அவர் தனது 95 ஆவது வயதில் காலமானார்.
பிரான்ஸில் மரண தண்டனையை இல்லாதொழித்த சட்டத்தின் சிற்பி எனப் புகழப்படுகின்ற அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
ரொபேர் பெடன்ரரின் முயற்சியால் ஓகஸ்ட் 4,1982 நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் பிரான்ஸில் ஓரினச்சேர்க்கையைக் குற்றமாகக் கருதுவதை நீக்கியது. இன்று ஓரினச் சேர்க்கையாளர்கள் அனுபவிக்கின்ற சுதந்திரங்கள் அனைத்துக்கும் அன்றைய அவரது முயற்சியே வித்திட்டது.
அதிபர் மக்ரோன் தனது செய்தி ஒன்றில் ரொபேர் பெடன்ரரை,”இந்த நூற்றாண்டின் முக்கிய நபர்… குடியரசின் சாட்சி, பிரான்ஸின் ஆத்மா “என்று வர்ணித்துள்ளார்.
நாடு ஓர் உயர்ந்த மனிதனை, சிறந்த சட்டவாளரை, மிகச் சிறந்த நீதி அமைச்சரை இழந்து விட்டது என்றும் மக்ரோன் தனது அஞ்சலிச் செய்தியில் தெரிவித்திருக்கிறார். ரொபேர் பெடன்ரருக்குத் தேசிய துக்க நிகழ்வு ஒன்றில் அரசு அஞ்சலி செலுத்தப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

சிறந்த சட்டவாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய பெடன்ரர், 1981 இல் பிரான்ஷூவா மித்ரோன் (François Mitterrand) அதிபராகத் தெரிவானதும் அவரது அரசாங்கத்தில் நீதி அமைச்சரானார். மரண தண்டனையை இல்லாதொழிப்பது என்பது சோசலிஸக் கட்சியின் அதிபராகிய மித்ரோனின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அதற்குச் செயல்வடிவம் கொடுத்து நிறைவேற்றச் சளைக்காமல் பாடுபட்டவர் ரொபேர் பெடன்ரர்.

தற்சமயம் மோல்டோவா என்ற நாடாக விளங்கும் பகுதியில் இருந்து பிரான்ஸில் குடியேறிய தோல் வியாபாரியான யூத இனத் தந்தைக்கு மகனாக மார்ச் 30,1928 இல் பாரிஸில் பிறந்தவர் ரொபேர் பெடன்ரர். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் அவருக்குப் 14 வயதான சமயத்தில் அவரது தந்தை உட்பட யூதர்கள் பலர் லியோனில் வைத்து நாஸி ஆதரவுப் படைகளால் பிடிக்கப்பட்டுப் போலந்தில் உள்ள ஜேர்மனிய நாஸி சித்திரவதை முகாம் ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தனர்.
இளம் வயதில் சட்ட நீதியின் பால் ஆர்வம் கொண்டிருந்த பெடன்ரர், பிரான்ஸில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் நியூயோர்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுமானிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
மரணதண்டனைத் தீர்ப்பளிக்கின்ற பிரான்ஸின் அன்றைய நீதிச் சட்டத்தைக் “கொலைகாரச் சட்டம்” என்று வாதிட்டு அதை எதிர்த்துப் பல வழக்குகளில் தனித்து நின்று வாதாடினார். விடாது போராடினார்.
நாட்டின் சட்டத்தில் இருந்து மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று அவர் வாதாட ஆரம்பித்த சமயத்தில் அதற்குச் சிறுபான்மையானோரது ஆதரவு மட்டுமே இருந்தது. கொலைக் குற்றங்களில் மரண தண்டனை பெற்றவர்களைக் காப்பாற்ற முயன்றதால் அவருக்கு நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பும் கிளம்பியது .

படம் :கூர் வாள் பொருத்திய ஜியோற்றின் (guillotine) இயந்திரம்.

முக்கிய வழக்கு ஒன்றில் மரண தண்டனை பெற்ற கைதியை அவரது தலை துண்டிக்கப்பட்டுவதில் இருந்து பாதுகாத்தபோது அந்த விவகாரம் நாடெங்கும் எதிர்ப்பும் ஆதரவும் கலந்த உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
பிரான்ஸில் மரண தண்டனை ஜியோற்றின் (guillotine) என்று பிரெஞ்சு மொழியில் அழைக்கப்படுகின்ற- தலை துண்டிக்கும் கூர் வாள் பொருத்திய- இயந்திரத்தினால் நிறைவேற்றப்பட்டு வந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பிருந்தே 1789 முதல் நடைமுறையில் இருந்துவந்த தலை துண்டிக்கும் இயந்திரம் மூலம் 1977 இல் இறுதியாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இளம் பெண் ஒருவரைச் சித்திரவதை செய்து கொன்றார் எனக் குற்றம் சுமத்தப்பட்ட துனீசியா நாட்டுக்குடியேறி ஒருவருக்கே ஜியோற்றின் (guillotine) மூலமாகத் தலை துண்டிக்கும் கடைசித் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ரொபேர் பெடன்ரர் பிரான்ஸில் மரண தண்டனையை ஒழிப்பதில் வெற்றிகண்ட பிறகும் உலகெங்கும் இருந்து அந்தத் தண்டனையை நீக்க வேண்டும் என்ற குரலாகத் தொடர்ந்தும் ஒலித்து வந்தார்.”மரண பயம் என்பது அடிப்படை மனித உரிமை மீறல்களில் ஒன்று” என்பது அவரது வாதமாக இருந்துவந்தது.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">