பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்களில் ஈபிள் கோபுரத்தின் இரும்புத் துண்டு!
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிஸில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள பதக்கங்களின் நடுவில் ஈபிள் கோபுரத்தின் இரும்புத் துண்டு ஒன்று சிறிய அறுகோண வடிவத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.
பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் இத்தகவலை வெளியிட்டிருக்கின்றனர். தங்கம், வெள்ளி, வெண்கலம் உட்பட மொத்தம் 5 ஆயிரத்து 84 பதக்கங்களிலும் ஈபிள் கோபுரத்தின் இரும்புத் துண்டு இடம்பெற்றிருக்கும்.
1889 ஆம் ஆண்டின் ஈபிள் கோபுரத்தின் சிறிய பகுதியை வெற்றியாளர்கள் அனைவருக்கும் வழங்குவதற்கு விரும்புகின்றோம் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ரொனி எஸ்தாங்கே (Tony Estanguet) தெரிவித்திருக்கிறார். பதக்கங்களில் காணப்படுகின்ற தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற விலையுயர்ந்த உலோகங்களுடன் நமது நாட்டின் பொக்கிஷமாகிய ஈபிள் கோபுரத்தின் விலைமதிப்பற்ற உலோகமும் சேர்ந்துகொள்கின்றது – என்றும் அவர் பெருமையுடன் அறிவித்தார்.
ஈபிள் கோபுரத்தின் பராமரிப்புப் பணிகளின் போது சேமிக்கப்பட்ட அதன் இரும்புப் பகுதிகள் சில பாரிஸில் உள்ள களஞ்சியம் ஒன்றில் பராமரிப்பு நிறுவனத்தினால் பேணிப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து பெறப்பட்ட இரும்பே பதக்கங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
1760 ஆம் ஆண்டு முதல் செல்வந்தர்களினதும் பிரபுக்களினதும் அணிகலன்களைத் தயாரித்து
வருகின்ற பிரான்ஸின் புகழ் பெற்ற முன்னணி ஆபரண வடிவமைப்பாளர்களாகிய சௌமெற் ஜூவல்லரி நிறுவனத்தினால் (jewellery house Chaumet) ஒலிம்பிக் பதக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒளியைத் தெறிக்க விடுகின்ற சூரியக் கதிர்களின் மையத்தில் ஈபிள் கோபுரத்தின் சிறிய அறுகோணத் துண்டு கண்ணைக் கவரும் கலை வண்ணத்தில் தோன்றும் விதமாகப் பட்டை தீட்டப்பட்டுப் பொருத்தப்பட்டுள்ளது.
ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 11 வரையும் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போதும் ஓகஸ்ட் 28 முதல் செப்ரெம்பர் 8 வரை நடக்கவுள்ள பரா ஒலிம்பிக் போட்டிகளின் போதும் ஈபிள் கோபுரம் முக்கிய பாத்திரத்தை வகிக்கவுள்ளது. தொடக்க விழாவின் போது செய்ன் நதி மீது படகுகளில் அணிவகுத்து வருகின்ற தேசிய அணி வீரர்கள் ஈபிள் கோபுரம் அருகிலேயே வெளியேறி வருகைதரவுள்ளனர்.
அதேசமயம் பிரமாண்டமான ஒலிம்பிக் தீபம் ஒன்று போட்டி நடைபெறும் காலத்தில் ஈபிள் கோபுரம் மீது ஒளிர விடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.