மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் ஈட்ட நினைப்பதை இரா.சாணக்கியன் தவிர்க்க வேண்டும்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கண்டனம்.

 

மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் ஈட்ட நினைப்பதை இரா.சாணக்கியன் தவிர்க்க வேண்டுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்  ‘கடந்த 4ஆம் திகதி இடம் பெற்ற கருப்பு தின போராட்டமானது சாணக்கியனின் தலைமையில் இடம்பெற்றதாக பிரச்சாரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கறுப்பு தின போராட்டத்தை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரும் சேர்ந்து வடக்குக் கிழக்கு தழுவிய போராட்டமாக நாங்கள் அதனை ஏற்பாடு செய்திருந்தோம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஆகிய நாங்கள் தனித்துவமாகவே எங்களது போராட்டங்களை செய்து வருகின்றோம். எங்களுடைய போராட்டம் ஒரு அமைப்பாகவோ அல்லது அரசியல் தலையிடும் இல்லாமல் நாங்கள் ஒரு சுயமான தாய்மாராக இணைந்து செய்த போராட்டம் தான் 2012 ஆம் ஆண்டில் இருந்து இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றோம். அதேவேளை, போராட்டங்களை சில அமைப்புகளும் கையில் எடுத்து செய்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றது ஆனால் இதனை உண்மையிலேயே ஏற்பாடு செய்தது பல்கலைக்கழக மாணவர்களும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமும் மாத்திரமே அதனை யாரும் உரிமை கோரமுடியாது  என அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.