இலங்கை பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளனர்
நாடளாவிய ரீதியில் 10,221 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி, குறித்த பாடசாலைகளின் சுற்றுப்புறங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்ததாக கூறப்படும் 517 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனைகளில் 85 கிராம் ஹெரோயின், 48 கிராம் ஐஸ், 1,561 போதைமாத்திரைகள், 1 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா, 3 கிலோ மாவா, 2 கிலோவிற்கும் அதிகமான மதன மோதக மாத்திரைகள் , 1,285 சிகரட்டுக்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கையின் மூலம் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனை குறைவடைந்துள்ள நிலையில், 107 பாடசாலைகளில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம், போதைப்பொருள் பாவனை உள்ளதாக அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு பாடசாலை தொடர்பாகவும் அந்தந்த பாடசாலை ஆசிரியர்கள், மாணவ தலைவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரின் பங்களிப்புடன் 5,133 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிள்ளைகளை தவறான வழியில் இட்டுச்செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் அமைந்துள்ள 434 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பதில் பொலிஸ் மா அதிபர், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.