இலங்கையினுடைய சுதந்திரநாள் தமிழர்களுக்கு  கரிநாள் : பிரித்தானிய மன்னரை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி.


தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கையினுடைய சுதந்திரநாள் எங்களுக்கு கரிநாள் என தெரிவித்து இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிராக பிரித்தானியாவில் எதிர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றது. இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தினர். இலங்கை தீவின் பல பாகங்களிலும் இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஆனால் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் கறுப்பு தினமாக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. பிரித்தானிய மன்னரை நோக்கி தாயக மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுப்பட்டிருந்தனர்.தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என ஆரம்பமான கரிநாள் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது, ‘இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், தமிழ் மக்களிள் நில அபகரிப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டதுடன், தமிழர்களுக்கு சர்வதேச மத்தியஸ்தத்துடனான தீர்வை வழங்க ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும்’ எனவும் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்தனர்.தாயகத்தில் கரிநாளன்று எழுச்சிகொண்ட மக்கள் போராட்டங்களை இலங்கை அரசு நசுக்க முற்பட்ட வேளையிலும், தடைகளை தவிர்த்து போராட்டங்கள் நடைபெற்ற சூழலில் பிரித்தானிய மன்னரை நோக்கிய இப்போராட்டமும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.