எதிர்வரும் 11இல்  இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயல் குழு கூட்டம்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயல் குழு கூட்டத்தை எதிர்வரும் 11 அல்லது 12ஆம் திகதி வவுனியாவில் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கட்சி வட்டாங்கள் மூலம் அறிய வருகின்றது. இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வது தொடர்பிலும் சிந்திக்கப்படுகிறது என்றும் கூறப்படுகின்றது.

கடந்த மாதம் திருகோணமலையில் தமிழ் அரசு கட்சியின் மத்திய செயல்குழு, பொதுக் குழுக்கள் கூடின. இதன்போது, பொது செயலராக குகதாசன் உள்ளிட்ட புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. பொதுச் செயலர் விடயத்தில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், பொதுக் குழுவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் குகதாசன் பொதுச் செயலராக 12 மேலதிக வாக்குகளால் உறுதிப்படுத்தப்பட்டார்.

எனினும், வாக்கெடுப்பு நடத்தப்பட்ட விதம் – நடத்தப்பட்ட முறை மற்றும் பலர் வெளியேறிய நிலையில் நடத்தப்பட்டது என்று கூறி சர்ச்ச எழுந்த நிலையில் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா புதிய தலைவராக தெரிவான சிறீதரன் ஆகியோர் புதிய நிர்வாகத்தை கிடப்பில் பேணுவது என்று முடிவு செய்தனர். அத்துடன், சிங்கப்பூர் செல்லும் மாவை சேனாதிராசா எதிர்வரும் 10ஆம் திகதி நாடு திரும்புகிறார். அதன் பின்னர் தமிழ் அரசு கட்சியின் மத்திய செயல் குழுவை கூட்டுவது என்று தீர்மானித்திருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.