பாரிஸ் நோக்கி வரும் பிரதான எட்டு வீதிகள் ட்ராக்டர்களால் வழிமறிப்பு!
உழவரது பிரதிநிதிகளை அழைத்து அட்டால் பேச்சு,விவசாயிகளுக்கு மேலும் தீர்வுகள் அரசு அறிவிக்கும்.
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிஸை முற்றுகையிடுகின்ற விவசாயிகளது பேரணி நேற்று ஆரம்பமாகியுள்ளது. பாரிஸ் பிராந்தியத்தின் உள்ளே நுழைகின்ற எட்டு நெடுஞ்சாலைகளை அவர்கள் தங்களது ட்ராக்டர்கள் மற்றும் வாகனங்களால் வழிமறித்திருக்கின்றனர். வீதிகளில் தாங்கள் தங்கி இருப்பதற்கான வசதிகளையும் அவர்கள் ஏற்படுத்தி உள்ளனர். A1, A4, A6, A10, A13, A16, A5a, N184 போன்ற வீதிகளிலேயே தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேசமயம் வல்-து-மானில் அமைந்துள்ள றான்ஜிஸ் சர்வதேச மரக்கறிச் சந்தையையோ அல்லது பாரிஸின் சர்வதேச விமான நிலையத்தையோ முற்றுகையிடும் விதமான நடவடிக்கை எதனையும் விவசாயிகள் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. இந்தப் பகுதிகளில் கலவரம் அடக்கும் கவச வாகனங்களுடன் படையினர் காவல் புரிந்து வருகின்றனர்.
பாரிஸ் நகரத்தைச் சூழ சுமார் 15 ஆயிரம் பொலீஸார் மற்றும் ஜொந்தாம் படையினர் காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர் என்று உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, பிரதமர் கப்ரியேல் அட்டால் நேற்றுமாலை FNSEA என்கின்ற பெரிய விவசாயிகள் அமைப்பினதும் இளம் விவசாயிகள் சங்கத்தினதும் தலைவர்களை பிரதமர் மாளிகைக்கு அழைத்து அவர்களோடு பேச்சு நடத்தியிருக்கின்றார். அதேசமயம் விவசாயிகளது கோரிக்கைகளுக்கு மேலும் பல தீர்வுத் திட்டங்களை அரசு இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கும் என்று அரசாங்கப் பேச்சாளர் பிரிஸ்கா தேவெனோ (Prisca Thevenot) தெரிவித்திருக்கிறார்.
ஐரோப்பிய விவசாயக் கொள்கையால் ஆத்திரமடைந்துள்ள உள்ளூர் விவசாயிகள் ஜேர்மனி, நெதர்லாந்து, போலந்து, பெல்ஜியம் போன்ற ஏனைய நாடுகளிலும் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்த நெருக்கடி குறித்து அதிபர் மக்ரோன், பிரெசெல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவருடன் பேசவுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது.