எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் – எம்.பிகள் மீதும் நீர்தாரை, கண்ணீர் புகை தாக்குதல்.

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று முன்னெடுத்துவரும் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான பேரணி மீது நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பேரணி கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் பயணிக்கும் போதே இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீ்ர் தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை, ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்கள் இயற்றப்படுகின்றமை, மக்களின் வாழ்க்கை செலவை குறைக்க நடவடிக்கையெடுக்காமை, முறையற்ற பொருளாதார கொள்கை உட்பட பல்வேறு காரணிகளை வலியுறுத்திதே ஐக்கிய மக்கள் சக்தி இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்து வருகிறது.

பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களும் அதன் பங்காளிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு அரசுக்கு எதிர்ப்பையும் வெளியிட்டனர்.

பேரணி ஆரம்பிப்பதற்கு முன்பு நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலி முகத்திடல் உள்ளிட்ட சில இடங்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைய தடை விதித்து மூன்று நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

டீன்ஸ் வீதி, லிப்டன் ரவுண்டானா, ஓல்கொட் மாவத்தை, டெக்னிக்கல் சந்தி, மருதானை சந்தி, T.B.ஜயா மாவத்தை, வழியாக பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தியினர் கொழும்பில் இன்று நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு, பொது நூலகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்ட போது குறித்த நபர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.