புதிய குடியேற்றச் சட்டத்தின் முக்கிய பல விதிகளை நீக்கி அரசமைப்புச் சபை அதிரடித் தீர்ப்பு!
Kumarathasan Karthigesu-பாரிஸ்
- குடும்ப இணைவுக் கட்டுப்பாடு..
- அகதிகளை ஏற்க கோட்டா முறை..
- சமூக நல உதவிகள் நிறுத்தம்..
- குழந்தைகளது குடியுரிமை..
சர்ச்சைக்குரிய சரத்துகள் ,மனித உரிமைக்கு முரண்! நிராகரித்தது உயர்பீடம்!!
நாட்டில் புதிய சட்டங்களை அங்கீகரிக்கின்ற அரசமைப்புச் சபை(Le Conseil constitutionnel) புதிய குடியேற்றச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பல விதிகளைப் – பிரான்ஸின் பெறுமானங்களுக்கும் அடிப்படை மனித உரிமைகளுக்கும் முரணானவை என அறிவித்து – ஏற்க மறுத்துத் தீர்ப்பளித்திருக்கிறது.
வெளிநாடு அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்திய புதிய குடியேற்றச் சட்டம் கடந்த டிசெம்பரில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டமை தெரிந்ததே. சூடு பறக்கின்ற விவாதங்கள் பெரும் அமளிதுமளிகள், அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் வலதுசாரிகளது தீவிர தலையீடுகளால் அந்தச் சட்டம் நிறைவேறியிருந்தது.
புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னராக அது நாட்டின் அரசமைப்புச் சட்டப் பெறுமானங்களுக்கு உட்பட்டதா என்பதைத் தீர்மானிப்பதற்காக அதற்குரிய உயர் நீதி பீடமாகிய”Conseil constitutionnel” என்று அழைக்கப்படுகின்ற அரசமைப்புச் சபையிடம் அரசுத் தலைவரால் கையளிக்கப்பட்டிருந்தமை நீங்கள் அறிந்ததே.
அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சட்டத்தில் இடம்பெற்றிருந்த- வெளிநாட்டவர்களுக்குப் பாதகமான – சர்ச்சைக்குரிய விதிகள் பலவற்றையே ஒன்பது பேர்கொண்ட அந்தச் சபை திருத்தி – நீக்கி-ஒதுக்கியிருக்கிறது.
பிரான்ஸில் புகலிடம் பெறுகின்ற அகதிகள் மற்றும் குடியேறிகள் தங்களது குடும்பத்தவர்களை இங்கே அழைப்பதற்கான நடைமுறைகளைக் கடுமையாக்குதல்(restriction du regroupement familial,) அரச உதவிகள், சமூக நல நிதி உதவிகள் என்பன ஐரோப்பியர்கள் அல்லாத வெளிநாட்டு அகதிகளுக்குக் கிடைப்பதைக் கட்டுப்படுத்துதல்(la restriction des non-Européens à certaines prestations socials) வெளிநாட்டுக் குடியேறிகளை நாட்டுக்குள் உள்ளெடுப்பதைக் குறைக்கும் நோக்குடனான ‘கோட்டா’ எண்ணிக்கை முறை(la création de quotas migratoires) வெளிநாட்டுப் பெற்றோருக்குப் பிரான்ஸில் பிறந்த குழந்தைகள் குடியுரிமை பெறுவதை இறுக்கமாக்குகின்ற விதிகள் (Le droit du sol) உட்படச் சர்ச்சைக்குரிய பல சரத்துகளே புதிய சட்டத்தில் இருந்து நீக்கி ஒதுக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்படுகிறது.
புதிய சட்டத்தின் 86 சரத்துகளில் 49 சரத்துகளை அரசமைப்புச் சபை பரிசீலனைக்கு உட்படுத்தியது. அவற்றில் 32 சரத்துக்கள் அல்லது மூன்றில் ஒரு பங்கு விதிகள் – முழுமையாக அல்லது பகுதி அளவில் நீக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
மக்ரோன் அரசினால் தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய சட்ட மூலத்தின் ஆரம்ப வரைவை அது முதன்முதலாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது அதில் உள்ளடங்கிய விதிகள் நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிய வெளிநாட்டுக் குடியேறிகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் போதுமானவையாக இல்லை என்று தெரிவித்து, வலதுசாரிக் கட்சிகள் நிராகரித்திருந்தன. பின்னர் அந்தச் சட்ட மூலம் வலதுசாரிகளது எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்தும் வகையில் இரு அவைகளினதும் கூட்டுக் குழு ஒன்றினால் திருத்தப்பட்டு வெளிநாட்டவருக்கு எதிரான கடுமையான பல விதிகள் அதில் சேர்க்கப்பட்டிருந்தன. அவ்வாறு திருத்திக் கடுமையாக்கப்பட்ட அந்த வரைவு மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட சமயத்தில் வலதுசாரிகளோடு சேர்ந்து நாட்டின் தீவிர வலதுசாரிக் கட்சியினரும் அதனை அமோகமாக ஆதரித்து நிறைவேற்றி வெற்றிபெறச் செய்திருந்தனர்.