மதுபானசாலையை திறக்கவுள்ள சவுதி அரேபியா.
தலைநகர் ரியாத்தில் தனது முதல் மதுபான சாலையை திறக்க சவுதி அரேபியா தயாராகி வருகிறது.
முஸ்லிம் அல்லாத தூதர்களுக்கு மட்டுமே சேவை வழங்கும் நோக்குடன் மதுபான சாலையை சவுதி அரேபியா திறக்க திட்டமிட்டிருப்பதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சேவையை பெற வாடிக்கையாளர்கள் மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதுடன் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து அனுமதிக் குறியீட்டைப் பெற வேண்டும்.
மேலும் அவர்கள் வாங்கும் மாதாந்திர மதுபான ஒதுக்கீட்டு விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் தீவிர பழமைவாத முஸ்லிம் நாட்டை சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக திறக்க சவுதி இளவரசர் பின் சல்மான் தலைமையிலான அரசின் முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு மைல்கல் ஆகும்.
எண்ணெய் ஏற்றுமதிக்கு பின்னரான ‘விஷன் 2030’ எனப்படும் பரந்த பொருளாதார திட்டங்களின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது.
ஏனைய முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினர் மதுபான சாலையை அணுக முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் வாழ்கின்றனர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் ஆசியா மற்றும் எகிப்தைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலாளர்கள்.
எதிர்வரும் வாரங்களில் மதுபான சாலை திறக்கப்படும் எனத் திட்டங்களைப் பற்றி நன்கு அறிந்த ஒரு வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளன.
சவுதி அரேபியாவில் மது அருந்துவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. இது நூற்றுக்கணக்கான சவுக்கடி, நாடு கடத்தல், அபராதம் அல்லது சிறைத்தண்டனை போன்றவற்றுக்கு வழி வகுக்கினறது..