சவேந்திர சில்வாவை தடை செய்யும் கோரிக்கைக்கு பிரித்தானிய காவல்துறை நிழல் அமைச்சர் ஆதரவு.
-மதிப்பிற்குரிய அலெக்ஸ் நோரிஸ் எம்.பி உடனான இராஜதந்திர சந்திப்பின் வெற்றி-
இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானிய காவல்துறையின் நிழல் அமைச்சரும், நாட்டிங்ஹாம் வடக்கு (Nottingham North) பகுதி பாராளுமன்ற உறுப்பினருமாகிய மதிப்பிற்குரிய அலெக்ஸ் நோரிஸ் எம்.பி (Hon. Alex Norris MP) அவர்களுடன் இராஜதந்திர சந்திப்பு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (19/01/2024) மதியம் 2.30 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.
சட்ட ஆலோசகரும் மனித உரிமைசெயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் The Sri Lanka Campaign for Peace and Justice அமைப்பின் பிரச்சாரப் பணிப்பாளர் திரு. பென்ஜமின் குமார் மொறிஸ், தொrழில்கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour) அமைப்பின் தலைவர் திரு சென் கந்தையா, மற்றும் இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமாக சர்வதேச மையத்தின் (ICPPG) சார்பில் திரு. றோய் ஐக்ஷான் கலந்துகொண்டார். அத்துடன் இனப்படுகொலையின் நேரடி சாட்சியங்கள் மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களான கனேசமூர்த்தி விதுஷன், அனுஷன் பாலசுப்ரமணியம், மற்றும் பிரகலதன் சிவகுருநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கீத் குலசேகரம் அவர்கள் உரையின் போது, இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு வரலாற்று ரீதியாக பிரித்தானியாவே பொறுப்பு என்பதை விளக்கி, தமிழ்மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமைப்பாட்டையும் எடுத்துரைத்தார். ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு(FCDO) போதுமான ஆதாரங்களை சமர்பித்த போதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும்தெரிவித்தார்.
சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா, கனடா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்கா, கனடாவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார்.
அடுத்து உரையாற்றிய திரு. பெஞ்ஜமின் குமார் மொறிஸ், சவேந்திர சில்வா இழைத்த யுத்தக்குற்றங்களையும் அதற்கான ஆதாரங்களையும் விபரமாக எடுத்து விளக்கினார்.
தொடர்ந்து உரையாற்றிய சென் கந்தையா அவர்கள், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்வதற்கு இதுவரை 50ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிய கோரிக்கைகளுக்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தை தருவதுடன், தற்போதைய பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தடை விதிக்க தயக்கம் காண்பிப்பது ஏன் என்று வினவினார். பிரித்தானிய எதிர்கட்சி தலைவர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரனை செய்ய வேண்டும் என கூறியதை வரவேற்பதாகவும் அதேபோல் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையினை பிரித்தானியா அங்கீகரிக்க வேண்டும் என வழியுறுத்தினார்.
அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர், மிகவும் ஆர்வத்துடன் மேலதிக விபரங்களையும் கேட்டறிந்தார். இலங்கை பிரச்சனை பற்றி தான் ஓரளவு அறிந்திருந்த போதிலும், ஈழத்தமிழர்கள் தன்னை சந்தித்து இவ்வாறு விளக்கமாக உரையாடியது இதுவே முதல்தடவை என்றும், இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என தாம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு தான் முழுமையாக ஆதரவளிப்பதாகவும், தனது தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் வாக்களித்தார். அத்துடன் தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு (APPGT) மற்றும் மக்நெட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு (APPG for Magnitsky Sanctions) என்பவற்றில் இணையவும் உத்தரவாதமளித்தார்.
தன்னை முதல்முறையாக சந்தித்து, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றி பயனுள்ள முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.