தனுஸ் கோடியையும் இலங்கையையும் இணைக்கும் புதிய கடல் பாலம்
அயோத்தி கோவிலை தொடர்ந்து இந்தியாவின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தனுஸ் கோடியையும் இலங்கையையும் இணைக்கும் புதிய கடல் பாலம் தொடர்பில் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையிலான புதிய பாலமொன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அத்தோடு, இலங்கையை நோக்கிய சுமார் 23 கிலோமீற்றர் நீளமுள்ள குறித்த பாலத்தை அமைப்பதற்கான சாத்திய கூறு ஆய்வுகளை மத்திய அரசு விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதேவேளை அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூலை டெல்லிக்கு விஜயம் செய்திருந்த போது இந்த திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதற்காக தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எவ்வாறாயினும், இரண்டு நாடுகளைக் கடல் பாலம் மூலம் இணைக்க வேண்டும் என்பது குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே கோரிக்கையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.