சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு – நுவரெலியாவில் நோயாளிகள் பாதிப்பு.

செ.திவாகரன்

அரச வைத்தியர்களுக்கு ரூ.35,000 உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ள நிலையில், சுகாதார ஊழியர்களுக்கும் குறித்த ஊக்கத்தொகையை வழங்க வேண்டுமென வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்
நுழைவாயில் முன்பாக செவ்வாய்க்கிழமை (16) மதியம் அரசுக்கு எதிரான வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன இதனால் பாதிக்கப்பட்டன, வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்த நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

அதேவேளை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமை போல் இயங்குகின்றன. இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது பொது வைத்தியசாலையின் கடமைகளை ஈடுசெய்ய இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.