கோட்டாபய ராஜபக்சவினால் துமிந்தவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டத்திற்கு புறம்பானது- உயர் நீதிமன்றம் அறிவிப்பு.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானம் தன்னிச்சையானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன், குறித்த தீர்மானம் சட்டத்திற்கு புறம்பானது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, அரசியலமைப்பு விதிகளை பின்பற்றாது துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இரத்து செய்யுமாறு உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய குழாம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், துமிந்த சில்வா தொடர்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் துமிந்த சில்வா உள்ளிட்ட மேலும் நால்வருக்கு 2016 ஆம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும், 2019 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் 2021 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

இந்த பொது மன்னிப்பின் சட்டபூர்வ தன்மையை கேள்விக்குட்படுத்தி மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர மற்றும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் கஸாலி ஹுசைன் ஆகியோரினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை உயர் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இறுதித் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.