இனப்படுகொலைக்காக இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமென தென்னாப்பிரிக்கா எடுத்துள்ள தீர்மானம்: இலங்கை பாராட்டு
காசாவில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்காக இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமென தென்னாப்பிரிக்கா எடுத்துள்ள தீர்மானத்தை பாலஸ்தீனத்தின் ஒற்றுமைக்கான இலங்கைக் குழு பாராட்டியுள்ளது.
இலங்கைக்கான தென்னாப்பிரிக்காவின் உயர்ஸ்தானிகரை சந்தித்து பாலஸ்தீனத்தின் ஒற்றுமைக்கான இலங்கைக் குழு இவ்வாறு பாராட்டுத் தெரிவித்துள்ளது.பாலஸ்தீனிய சுதந்திரம் இல்லாமல் எங்கள் தேசத்தின் சுதந்திரம் முழுமையடையாது என்று அறிவித்த நெல்சன் மண்டேலாவின் முழக்கத்தினை பின்பற்றி தென்னாபிரிக்கா தமது வரலாற்று கடமையாக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதை வரவேற்பதாகவும் இலங்கைக் குழு கூறியுள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைகளை தடுக்க முடியாமல், உலக சமூகம் ஆதரவற்ற நிலையில் இருக்கும் இந்த நேரத்தில், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் இந்த முடிவை இருள் சூழ்ந்த உலகில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதை போன்று உணர்கிறோம்.
இஸ்ரேலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும் என்ற தென்னாபிரிக்காவின் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். 10, 000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 22000 அப்பாவி பாலஸ்தீனிய குடிமக்கள் கொல்லப்பட்டதை கண்டு சலனமடையாத மேற்குலகின் சில சக்தி வாய்ந்த நாடுகள் இனப்படுகொலையை ஆதரித்துக் கொண்டிருக்கும் போது, தென்னாப்பிரிக்காவின் முடிவு உலக அரசியலில் தலை நிமிர்ந்து நிற்கிறது எனவும் பாலஸ்தீனத்தின் ஒற்றுமைக்கான இலங்கைக் குழு உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியுள்ளது.