கடும் பனிக் குளிரில் ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற அகதிகள் ஐவர் பலி!

உறைந்த கடல் நீரில் இறங்கி விறைத்தனர்.

Kumarathasan Karthigesu-பாரிஸ்
கடும் பனிப் புயல் வீசிய இரவு நேரத்தில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதற்காக பிரான்ஸின் கரையில் இருந்து படகு ஒன்றில் ஏறுவதற்காகப் புறப்பட்ட குடியேறிகளில் ஐவர் குளிரில் விறைத்து உயிரிழந்துள்ளனர். டசின் கணக்கானோர் இரவிரவாகக் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 02.00 மணியளவில் பிரான்ஸின் பா-து-கலே பிராந்தியத்தில் (Pas-de-Calais) Wimereux என்ற கடற்கரைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் சட்ட விரோதமாக ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்து செல்லும் நோக்கில் படகு ஒன்றில் ஏறுவதற்காகக் குளிரில் உறைந்து காணப்பட்ட கடல் நீரில் இறங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. குடியேறிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. சிரியா அல்லது ஈராக்கியக் குடியேறிகளே உயிரிழந்தவர்கள் என்று ஒரு தகவல் தெரிவித்தது.
கடற்படைக் ஹெலிக்கொப்ரர் ஒன்று ஒளி பாய்ச்ச கடலில் சிக்கியோரைத் தேடி ஐம்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் முதலுதவி வீரர்கள் பணியில் ஈடுபட்டனர். இந்தப் படகு அனர்த்தம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாகக் கரையோரப் பொலீஸ் பிரிவு தெரிவித்திருக்கிறது.
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் தொடர்ச்சியான முயற்சிகளில் புத்தாண்ட்டில் அகதிகள் உயிரிழந்த முதலாவது சம்பவம் இதுவாகும். ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுக் குடியேறிகள் பிரான்ஸின் வடக்குக் கடற்கரைகள் ஊடாக ஆங்கிலக் கால்வாயைக் கடக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் படகு விபத்துகளில் உயிரிழப்பது வழக்கமாக நடந்துவருகிறது.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">