குளிர் காலத்தின் அதி உச்ச மின்சார பாவனை அளவை நாடு தாண்டியது!
புதன்கிழமை இரவு 83.5 GW வலு பதிவு,மின்வெட்டு இல்லை
Kumarathasan Karthigesu-பாரிஸ்
நாட்டில் குளிர்கால மின்சாரபாவனை யின் அதி உச்ச அளவு (plus haut niveau de consommation en électricité) இன்று புதன்கிழமை இரவு பதிவாகியிருக்கின்றது.நாடு முழுவதும் உறைபனிக் குளிர் நிலவுகின்ற சமயத்தில் இன்றிரவு ஏழு மணியளவில் ஒட்டுமொத்த மின்சார பாவனை 83.5 ஜிகாவாட்ஸ் (gigawatts) ஆகப் பதிவாகியிருக்கிறது என்ற தகவலை மின்சார விநியோக முகாமைத்துவ நிறுவனமாகிய RTE தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு நாட்களாக 80 ஜிகாவாட்ஸ் என்ற அளவைக் கடந்திருந்த நுகர்ச்சி இன்றைய தினம் 83.5 ஜிகாவாட்ஸ் என்ற அளவை எட்டியது.
இந்த உச்சப் பாவனை அளவு காரணமாக நாட்டின் எந்தப் பகுதிகளிலும் மின் தடை அமுல்செய்யப்படவில்லை. நாட்டில் மின் தடை ஏற்பட வாய்ப்பில்லை என்பதை அரசு ஏற்கனவே உறுதிசெய்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
பிரான்ஸில் இதற்கு முன்னர் மின்சார நுகர்வின் அதி உச்ச சாதனை அளவு 2012 இல் பதிவாகியிருந்தது. அந்த ஆண்டில் கடும் குளிரும் பனிப் பொழிவும் நிலவிய பெப்ரவரி 9 ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு நாடு முழுவதும் மின்சார பாவனை அளவு 102.98 ஜிகாவாட்ஸாகப் பதிவானது.
உக்ரைன் – ரஷ்யா போரினால் எரிவாயு இறக்குமதியில் பெரும் சவால்கள் ஏற்பட்டிருந்ததை அடுத்து அரசு அணு மின் உலைகளை மீளவும் முழு அளவில் மின் உற்பத்திக்குத் தயார்ப்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
இதேவேளை – பாரிஸ் பிராந்தியத்தில் பனிப் பொழிவு குறைந்துள்ள போதிலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நீடிக்கிறது. சில மாவட்டங்களில் போக்குவரத்து நெருக்கடி காரணமாக இன்று புதன் கிழமை பாடசாலை பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டன.