4 வயது மகனை துடிக்க துடிக்க கொன்ற பிரபல AI நிறுவனத்தின் CEO பெண்.

39 வயதான பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் சிஇஓ ஒருவர் தனது நான்கு வயது மகனைக் கொடூரமாகக் கொலை செய்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இப்போதெல்லாம் ஏஐ மாடல்கள் சார்ந்து ஸ்டார்ட் அப் நிறுவனம் அமைப்பது தான் டிரெண்ட். அதன்படி, கர்நாடக தலைநகர் பெங்களூரில் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் மைண்ட்ஃபுல் ஏஐ என்ற நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளவர் சுசனா சேத். 39 வயதான இந்தப் பெண் தான் பெற்ற மகனையே கொடூரமாகக் கொலை செய்து பேக்கில் போட்டு எடுத்து வந்துள்ளார்.

கர்நாடகாவின் சித்ரதுர்காவில் இந்தப் பெண் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் பேக் ஒன்று இருந்த நிலையில், அதை போலீசார் சோதனை செய்த போது அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். அந்த பேக்கில் அவரது 4 வயது மகனின் உடல் மீட்கப்பட்டது. வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அந்த பெண் தனது மகனைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் போலீசாரை மிரள வைத்த போதிலும் இந்த கொலைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அந்த பெண் சமீபத்தில் தான் கணவரிடம் இருந்து பிரிந்தார். அதுவே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சேத்திடம் இருந்து அவரது கணவர் வெங்கட் ராமன் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தார். இதனால் சுசனா சேத் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஏஐ டெவலப்பராக பணிபுரியும் அவரது கணவர் இப்போது இந்தோனேசியாவில் இருக்கிறார். இந்தச் சூழலில் தான் சுசனா கடந்த சனிக்கிழமை தனது மகனுடன் வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டேவுக்கு சென்றார். இரு நாட்கள் அந்த ஹோட்டலில் இருந்த அவர் திங்கட்கிழமை ரூமை காலி செய்துள்ளார். அப்போது பெங்களூர் செல்ல ஒரு டாக்ஸியை புக் செய்யும்படி ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியிருக்கிறார்.

கோவாவில் இருந்து பெங்களூர் தூரம் அதிகம் என்பதால் விமானத்தில் செல்லலாமே என ஹோட்டல் ஊழியர்கள் கேட்டுள்ளனர். இருப்பினும், அதை சுசனா ஏற்கவில்லை. தனக்கு டாக்ஸி தான் வேண்டும் என அவர் வலியுறுத்திக் கேட்டுள்ளார். வரும் போது மகனுடன் வந்தவர் காலி செய்யும் போது தனியாகப் போவதை ஊழியர்களும் கவனித்துள்ளனர். அவர் ரூமை காலி செய்த பிறகு அதைச் சோதனை செய்த போது உள்ளே சுவரில் ரத்தக் கறைகள் இருந்ததைக் கவனித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக கோவா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கோவா போலீசார் டாக்ஸி டிரைவருக்கு போன் போட்டு சுசனா சேத்திடம் பேசியுள்ளனர். குழந்தை எங்கே என கேட்டதற்கு நண்பர் வீட்டில் இருப்பதாகச் சொல்லி ஒரு அட்ரஸை கொடுத்துள்ளார். ஆனால், அங்கே சோதனை செய்ததில் அப்படி யாருமே இல்லை என்பது தெளிவானது.

இதையடுத்து போலீசார் டிரைவருக்கு மீண்டும் கால் செய்துள்ளனர். சுசனாவுக்கு புரியக் கூடாது என்பதற்காக இந்தியில் பேசாமல் கோவாவின் உள்ளூர் மொழியான கொங்கனியில் பேசியுள்ளனர். மேலும், கோவா போலீசார் அந்த டிரைவரை அருகே உள்ள காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதன்படி அந்த டிரைவர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில்,​​சித்ரதுர்கா போலீசார் சுசனா சேத்தை கைது செய்தனர்,

சுசனாவிடம் அப்போது பேக் ஒன்று கையில் இருந்த நிலையில், அதை போலீசார் சோதனை செய்தனர். அதில் உள்ள அவரது மகனின் உடல் இருந்தது. இதையடுத்து கோவா போலீசார் விசாரணைக்காக அந்த பெண்ணை கோவா அழைத்துச் சென்றனர். மேலும், இது குறித்து சேத்தின் கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை இந்தியாவுக்குத் திரும்புமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த சுசனா சேத் “2021 ஆம் ஆண்டிற்கான ஏஐ பிரிவில் டாப் 100 சிறந்த பெண்கள்” பட்டியலில் இடம்பெற்றிருந்தார். அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பெர்க்மேன் க்ளீன் மையத்தில் படித்தவர், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி ஆய்வகங்களில் இயந்திர கற்றல் என பல்வேறு துறைகளில் சுமார் 12 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்