3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் யாழ்ப்பாணம் வேலணையில் கண்டுபிடிப்பு.
3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் யாழ்ப்பாணம் வேலணையில் நெதர்லாந்து மற்றும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிப்பு.
யாழ் குடாநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது. இத் தரவுகளைக் கொண்ட தொல்லியல் மையம் வேலணை தீவின் சுற்றுலாத் தலமான கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ் ஆய்வுத் தொடர்ச்சி 2009ம் ஆண்டு முதல் இலங்கையின் கரையோர வளங்களின் வரலாற்றுப் பயன்பாடு மற்றும் குறிப்பாக கடல் ஓடுகள் தொடர்பான பயன்பாட்டுப் போக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ் அகழ்வாய்வில் வேட்டையாடி உணவாக உட்கொள்ளப்பட்ட விலங்குகளின் எச்சங்கள், கருவிகள் மற்றும் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டதற்கான சான்றுகள் மற்றும் ஏராளமான தொல்பொருட்கள் காணப்படுகின்றன. இத்தகைய எச்சங்கள் இலங்கையில் தெற்கு கடற்கரையிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய மிக அண்மித்த சான்று மாந்தையில் கி.மு.1600க்கு முற்பட்டவை கிடைக்கப்பெற்றிருந்தது. தற்போது நடைபெற்று முடிந்த இவ் அகழ்வாராய்ச்சியில் இருந்து கிடைத்த தொல்பொருள் சான்றுகளின் காலப் பகுப்பாய்வினை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தை இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்நோக்கி நகர்த்தியுள்ளது.
இவ்வகழ்வாய்வினை இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் மற்றும் பாரம்பரிய முகாமைத்துவத் துறையின் மூத்த விரிவுரையாளர் திலங்க சிறிவர்தன அவர்களுடன் இணைந்து Groningen Institute of Archaeology of the University of Groningen in the Netherlands நிறுவனத்துடன் இணைந்து இந்திகா ஜெயசேகர, ஜனினா நோனிஸ் அத்துடன் தொல்லியல் மற்றும் பாரம்பரிய கற்கைகள் நிறுவகத்தின் நதீரா திஸாநாயக்க மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொல்லியல் துறை மாணவர்களான டக்சினி, கனுஸ்டன், சுசாந்தி ஆகியோர் இவ் ஆராய்ச்சியை மேற்கொண்டனர் .
தொகுப்பு – ஈழத்து வரலாறும் தொல்லியலும்