தமிழ் மக்கள் மீது மீண்டும் ஆயுதங்களை திணிக்க வேண்டாம்-சிறீதரன்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்மீது பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறுவரும் விவாத்தில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறீதரனின் உரையின் பின்னர் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர்,
அல்பிரட் துரையப்பா இந்து கோவிலின் உள்ளே கொல்லப்பட்டது இந்த சட்டத்தின் மூலமா? 100 இற்கும் அதிகமான தமிழ்த் தலைவர்களை பிரபாகரன் கொன்றுக்குவித்தது இந்தச் சட்டத்தின் ஊடாகவா?. தமிழ் மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் தலைமையை வழங்கக் கூடிய பல தலைவர்கள் இருந்தனர்.
லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற தலைவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக வரக் கூடிய சூழ்நிலை இருந்தது. அவர் உலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவராக இருந்தார்.
அமிர்தலிங்கம், நீலம் திருச்செல்வம் போன்றோரை படுகொலை செய்தது யார்?. தலதா மாளிகைக்கு குண்டு வீசி அங்கிருந்த அப்பாவி மக்களை படுகொலை செய்தது யார்?. காத்தான்குடியில் முஸ்லிம்களை படுகொலை செய்தது யார்?. இவற்றை அனுமதிக்கின்றீர்னளா?. தீவிரவாதிகளை ஒழித்தமைதான் குற்றமா?.
கட்டுநாயக்கவில் விமானங்களை குண்டு வெடிப்பில் பிரபாகரன் தகர்த்தார். இது நல்ல விடயமா?. ரயில்கள், பஸ்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். இவை நல்ல விடயங்களா?. தீவிரவாதத்தை ஒழிக்க ஏதாவது பணியை செய்தால் அதனைதான் இவர்கள் தீமையான விடயம் என்று கூறுகின்றனர்.
ஆனந்த சங்கரி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய முக்கியமான ஒரு தலைவராகும். அவரது வெள்ளவத்தை வீட்டில் புலிகள் தாக்குதல் நடத்திய போது அவர் எனது வீட்டுக்குதான் ஓடிவந்தார். அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவிடம் அழைத்துச் சென்று அவருக்கு பாதுகாப்பை பெற்றுக்கொடுத்தேன். அந்த பாதுகாப்புதான் இன்றும் அவருக்கு வழங்கப்படுகிறது. ஆனால், அவரது மகன் கேரி ஆனந்த சங்கரி கனடாவில் புலிகள் நல்லவர்கள் என பிரசாரம் செய்து வருகிறார்.
பங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டதால்தான் இன்று நீங்களும் பாராளுமன்றத்தில் இருக்கின்றீர்கள். சிறந்த தலைவர்களை பிரபாகரன் கொன்றொழித்தமையால்தான் உங்களை போன்றோர் பாராளுமன்றம் வர முடிந்தது. அதனால் முட்டாள்தனமான கருத்துகளை கூற வேண்டாம். உங்களை போன்றோர் இருக்கும் வரை வடக்கு, கிழக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்க போவதில்லை. நீங்கள்தான் தமிழ் மக்களின் சாபம் என்றார்.
நீதி அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த சிறீதரன் எம்.பி.,
பிரபாகரன் இருந்த தருணத்தில் இந்த பாராளுமன்றத்தில் 22 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். தற்போதைய நிலையை ஒருமுறை சிந்தித்து பார்க்க வேண்டும். 1954ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் தந்தை செல்வநாயகம் அகிம்சை வழியில் போராடிய போது அந்தப் போராட்டத்தை குண்டர்களை கொண்டு தாக்கியது யார்? திருகோணமலை கந்தளையில் 184 விவசாயிகளை வெட்டிக்கொன்றது யார்?. அப்போது ஆயுதங்கள் இருந்தனவா?.
பிந்துநோயா மற்றும் வெளிக்கடை சிறையில் தமிழ் கைதிகள் கொலை செய்யப்பட்டார்கள். குட்டிமணி, தங்கமணி படுகொலை செய்யப்பட்டார்கள். இவை அனைத்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்தான் செய்யப்பட்டன. கொக்கட்டிசோளை, நவாலி என பல இடங்களில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆயுங்களை நாங்கள் விரும்பி தூக்கியவர்கள் அல்ல. ஆயுதங்கள் எங்கள்மீது திணிக்கப்பட்டது என பிரபாகரன் கூறியிருந்தார். ஆகவே, மீண்டும் ஆயுங்களை திணிக்க வேண்டாம் என்றார்.