திருச்சி பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு?
ஜனவரி 2ம் தேதி திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி பாரதிதாசன் பல்கலையில் கலெக்டர், மத்திய மண்டல ஐஜி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி ஜனவரி 2ம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக தமிழகம் வரும் மோடி, அன்று நடைபெறும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்ள உள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், திருச்சி சரக டிஐஜி பகலவன், எஸ்பி வருண்குமார் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பல்கலைக்கழகத்தில் உள்ள 2 விழா அரங்குகளை (ஆடிட்டோரியங்கள்) பார்வையிட்டனர். இதில் எந்த அரங்கில் விழா நடத்தலாம் என்பது குறித்து துணை வேந்தர் செல்வத்திடம் கருத்துகளை கேட்டறிந்தனர். மாணவர்களை விழா அரங்கிற்குள் எந்த வழியாக அனுமதிப்பது, எப்படி அமர வைப்பது பற்றி தீவிரமாக ஆலோசித்தனர். பிரதமர் வரும் வாகனம் எந்த இடத்தில் நிறுத்துவது, பல்கலைக்கழகத்துக்குள் பிரதமர் வரும் வழித்தடங்களையும், பாதுகாப்பு அம்சங்களையும் பார்வையிட்டனர்.
மோடி வருகையையோட்டி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதிய முனையம் நுழைவு பகுதியில் உயர் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதிய முனையம் உள்பகுதி முழுவதும் மெட்டல் டிடெக்டர் மூலம் அங்குலம் அங்குலமாக சோதனையிடப்பட்டு வருகிறது. பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.