மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில், விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது.

பின்னர், அதிக சளி இருப்பதன் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். மேலும் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை சார்பில் அவ்வப்போது மருத்துவமனை தரப்பில் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து, விஜயகாந்த்  கடந்த 12-ஆம் தேதி வீடு திரும்பினார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேமுதிக தரப்பில்  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து வரப்பட்டுள்ளார் எனவும், பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.