தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் புதிய வகை கொரோனாவான ஜெ.என். 1 கொரோனா உறுதி.
தமிழகத்தில் இணை நோய் தொடர்பாக சிகிச்சைக்கு வந்தவர்களை பரிசோதித்தபோது 4 பேருக்கு புதிய வகை கொரோனாவான ஜெ.என். 1 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், திருச்சி, கோவை, மதுரையைச் சேர்ந்த 4 பேருக்கு ஜெ.என்.1 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பண்டிகை காலம் நெருங்கியுள்ளதால் மீண்டும் நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஒன்றிய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளன.
2019 நவம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா தொற்று உலகையே புரட்டிப்போட்டது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒமிக்ரான் உருமாற்றதொற்று இந்தியாவில் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது. தற்போது வரை கொரோனாவால் 5.33 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் என ஒன்றிய அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் சீனாவில் பரவ ஆரம்பித்த ஜேஎன்.1 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் கோவாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொற்று தற்போது நாடு முழுவதும் பரவி விட்டது. நாடு முழுவதும் 63 பேர் ஜேஎன்.1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக, கோவாவில் 34 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜேஎன்.1 வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் 4 பேருக்கு புதிய வகை கொரோனாவான ஜெ.என். 1 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், திருச்சி, கோவை, மதுரையைச் சேர்ந்த 4 பேருக்கு ஜெ.என்.1 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.