தனியார் தொழிற்சாலையின் அலட்சியமே அமோனியா வாயு கசிவுக்கு காரணம்-அன்புமணி ராமதாஸ்.

சென்னை, எண்ணூரின் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் ஒரு உர உற்பத்தி ஆலையில் அமோனியா வாயு கசிந்தது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் தொழிற்சாலையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து ஆலைக்கு அமோனியா வாயு கொண்டு வருவதற்காக குழாய் சேதமடைந்தது தான் வாயுக்கசிவுக்கு காரணம் ஆகும்.

எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்ததால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக களையப்படாத நிலையில் அடுத்து வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கிறது.

எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.” என்று கூறினார்.