சென்னை-நள்ளிரவில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு-தப்பியோடிய மக்கள்.

சென்னை, எண்ணூரின் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் ஒரு உர உற்பத்தி ஆலையில் அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது.

கோரமண்டல் ஆலை கடலில் அமைத்துள்ள திரவ அமோனியா வாயு எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா கசிந்ததுள்ளது.

எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய வெள்ளத்தினால் எண்ணெய்க் கழிவுகள் வெள்ள நீரில் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பாதிப்பிலிருந்து எண்ணூர் பகுதி மக்கள் மீள்வதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கோரமண்டல் ஆலைக்கான அமோனியா, எண்ணூர் துறைமுகம் வழியாக கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள 2.5 கி.மீ நீளமுள்ள பைப்லைனைப் பயன்படுத்தி கரையில் உள்ள கோரமண்டல் ஆலைக்கு அனுப்பப்படுகிறது.

நேற்று இரவு 12.45 மணிக்கு அந்த குழாயிலிருந்து அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளது. கசிவு ஏற்படத் தொடங்கி இரண்டு மணிநேரம் கழித்து, கோரமண்டல் ஆலையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் குழுவினர் அங்கு விரைந்து சென்று கசிவை சரி செய்துவிட்டதாக கோரமண்டல் ஆலை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமோனியா கசியத் தொடங்கியவுடன், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் திடீரென காற்றில் ஒருவித நெடி பரவத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வாகனங்களில் அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோரமண்டல் நிறுவனம் சார்பாக செய்யப்பட்ட சோதனையில், ஆலையின் வளாகத்தில் 400 மைக்ரோ கிராம் இருக்க வேண்டிய அமோனியா 2090 கிராமாக இருந்தது. அதாவது வழக்கத்தை விட ஐந்து மடங்கு அமோனியா காற்றில் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடல் நீரில் லிட்டருக்கு 5 மி.கி இருக்க வேண்டிய அமோனியா 49 மி.கி என இருந்துள்ளது. இதனால் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே இனி குழாயை பதிக்க வேண்டும் மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.