திருத்தந்தையின் ஊர்பி எத் ஓர்பி செய்தி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 25 திங்கள்கிழமை நண்பகல், உரோம் நகரின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தின் மேல் மாடத்தில் தோன்றி, தன் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தியை வழங்கினார்.

கிறிஸ்து பிறப்பு பெருவிழா மற்றும் உயிர்ப்பு பெருவிழா எனும் இரண்டு சிறப்பு பெருவிழாக்களில் மட்டுமே திருத்தந்தையால் வழங்கப்படும் ‘ஊர்பி எத் ஓர்பி’ எனப்படும், உரோம் நகருக்கும் உலகுக்கும் ஆன சிறப்புச் செய்தியை டிசம்பர் 25 திங்கள் கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலின் மேல்மாடத்தில் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலியை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறுநாள் அதாவது டிசம்பர் 25 திங்கள்கிழமை நண்பகல், உரோம் நகரின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தின் மேல் மாடத்தில் தோன்றி, தன் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தியை வழங்கினார்.

திருத்தந்தையின் ஊர்பி எத் ஒர்பி செய்தி 

அன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களின் பார்வையும் இதயமும் இயேசு பிறந்த பெத்லகேமின் பக்கம் திரும்பியுள்ளன. இந்த நாட்களில் வலியும் நிசப்தமும் ஆட்சி செய்யும் இடத்தில்தான், பல நூற்றாண்டுகளாக காத்திருந்த அறிவிப்பான “இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் (லூக் 2:11) என்று ஒலித்தது. பெத்லகேம் வானதூதர்களின் வார்த்தைகளான அவை, இன்று நமக்கும் எடுத்துரைக்கப்படுகின்றன. கடவுள் நமக்காகப் பிறந்துள்ளார் என்பதை அறியவும், எல்லையற்ற கடவுளின் முடிவில்லா வார்த்தையையும், அவர் நம்மத்தியில் உள்ளார் என்ற நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் நமக்குள் நிறைக்கின்றன. வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவான் 1:14) என்ற இறைவார்த்தைகள் வரலாற்றின் போக்கை மாற்றும் செய்தியாக உள்ளன.

பெத்லகேமின் அறிவிக்கப்பட்ட நற்செய்தியானது பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாகும் (லூக் 2:10). என்ன மகிழ்ச்சி? உலகின் மகிழ்ச்சியோ, வேடிக்கையின் மகிழ்ச்சியோ அல்ல மாறாக நம்மைப் பெரியவர்களாக்கும் ஒரு “பெரிய” மகிழ்ச்சி. நம் சகோதரராகிய இயேசு அவரது தந்தையை நமது தந்தையாக நம் எல்லாருக்கும் தந்தையாகக் கொடுக்க எளிய குழந்தையாக வந்தார். கடவுளின் மென்மையை நமக்கு வெளிப்படுத்துகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இறைத்தந்தையின் ஒரே பேரான அவர், கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை நமக்கு அளித்தார் (யோவான் 1:12). இதயத்தை ஆறுதல்படுத்துகின்ற, நம்பிக்கையைப் புதுப்பித்து, அமைதியைத் தருகின்ற மகிழ்ச்சி இங்கே உள்ளது: இது தூய ஆவியின் மகிழ்ச்சி, அன்பான குழந்தைகளாக நாம் இருப்பதற்கான மகிழ்ச்சி.

சகோதர சகோதரிகளே, இன்று பெத்லகேமில் பூமியின் இருளில் இந்த அணையாத சுடர் ஏற்றப்பட்டது, உலகின் இருளில் மேலோங்கும் கடவுளின் ஒளி, அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. (யோவான் 1.9) இந்த அருளில் மகிழ்வோம்! நம்பிக்கையையும் உறுதியையும் இழந்தவர்களே, மகிழ்ச்சியாயிருங்கள், ஏனென்றால் நீங்கள் தனியாக இல்லை. கிறிஸ்து உங்களுக்காக பிறந்துள்ளார். எதிர்நோக்கைக் கைவிட்டுவிட்டவர்களே, மகிழ்ச்சியடையுங்கள், ஏனென்றால் கடவுள் உங்களுக்காக தம் கரங்களை நீட்டுகின்றார். விரல்களை அல்ல. பயத்திலிருந்து உங்களை விடுவிக்கவும், இடர்ப்பாடுகளிலிருந்து மீட்கவும், தனது சிறு குழந்தையின் கைகளையும் கண்களையும் உங்களுக்குக் காட்டுகின்றார். உங்கள் இதயத்தில் அமைதியைக் காண முடியவில்லை என்றாலும் மகிழ்ச்சியாக இருங்கள் ஏனென்றால் உங்களுக்காக எசாயாவின் இறைவாக்கு நிறைவேறியுள்ளது. ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ அவருடைய “அமைதிக்கு முடிவே இராது” (9.6) என்கிறார் இறைவாக்கினர் எசாயா.

விவிலியத்தில் இயேசு அமைதியின் இளவரசராக இந்த உலகத்தின் இளவரசராக எதிர்பார்க்கப்படுகின்றார். உயிர்கள் மீது அன்பு கூர்பவராக வெளிப்படுத்தப்படுகின்றார். மீட்பர் இயேசுவின் பிறப்பிற்குப் பின் அப்பாவிக் குழந்தைகள் பெத்லகேமில் படுகொலை செய்யப்பட்டதைக் காண்கின்றோம். தாயின் கருவறையில், நம்பிக்கையைத் தேடி புலம்பெயர்ந்து செல்லும் பாதைகளில், போரினால் தங்களது குழந்தைப் பருவத்தை சிதைந்துபோன பல குழந்தைகளின் வாழ்வில் உலகில் இதுபோன்று எத்தனை அப்பாவிக் குழந்தைகள் படுகொலை செய்யப்படுகின்றன. அவர்கள்தான் இக்கால சிறிய இயேசுக்கள்.

அமைதியின் இளவரசரை முன்னறிவித்த எசாயா, அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார் அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள் என்று கூறுகின்றார். கடவுளின் உதவியால், அந்த நாள் நெருங்கி வரும் வகையில் செயல்படுவோம்.

போரினால் மக்களின் வாழ்க்கைப் பாதிப்புக்குள்ளாகும் இஸ்ரயேல் மற்றும் பாலஸ்தீனத்தை நினைவுகூர்கின்றேன். அனைவரையும், குறிப்பாக காசாவின் கிறிஸ்தவ சமூகங்கள், மறைப்பணித்தளங்கள் மற்றும் முழு புனித பூமியையும் அரவணைத்து நினைவுகூர்கின்றேன். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தை என் இதயத்தில் உணர்கின்றேன். பிணையக் கைதிகளாக உள்ளவர்களை விடுவிக்க மீண்டும் எனது வேண்டுகோளை உறுதியாக புதுப்பிக்கிறேன். பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களை அச்சமூட்டும் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். வன்முறை மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டுவதைத் தொடராமல், வலுவான அரசியல் விருப்பத்தாலும், பன்னாட்டு சமூகத்தின் ஆதரவுடனும் கட்சிகளுக்கு இடையே நேர்மையான மற்றும் விடாமுயற்சியுடன் உரையாடுவதன் வழியாக பாலஸ்தீனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்வோம்.

துன்புறுத்தப்பட்ட சிரியாவின் மக்கள் மற்றும் ஏமனில் பாதிக்கப்படும் மக்களை நோக்கி என் எண்ணங்கள் திரும்புகின்றன. அன்பான லெபனான் மக்கள், விரைவில் அரசியல் மற்றும் சமூக நிலைத்த தன்மையைக் காண செபிக்கின்றேன்.

குழந்தை இயேசுவின் மீது என் கண்களை நிலைநிறுத்தி உக்ரைன் மக்கள் அமைதியைப் பெற வேண்டிக்கொள்கிறேன். துன்புறுத்தப்பட்ட மக்களுடன் நமது ஆன்மிக மற்றும் உடனிருப்பை நெருக்கத்தைப் புதுப்பிப்போம், நம் ஒவ்வொருவரின் ஆதரவின் வழியாக அவர்கள் கடவுள் அன்பின் உறுதியான தன்மையை உணரட்டும்.

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே உறுதியான அமைதிக்கான நாள் நெருங்கி வருகிறது. மனிதாபிமான முன்முயற்சிகள் தொடரவும், இடம்பெயர்ந்த மக்கள் சட்டப்பூர்வமாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும், ஒவ்வொரு சமூகத்தின் மத மரபுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு மரியாதை அளிக்கப்படுதல் ஊக்குவிக்கப்படட்டும்.

சஹேல் பகுதி ஆப்பிரிக்காவின் சூடான், கேமரூன், காங்கோ ஜனநாயகக் குடியரசு, தென்சூடான் ஆகிய நாடுகளில் நிலவும் பதட்டங்களையும் மோதல்களையும் நாம் மறந்துவிடக் கூடாது.

கொரிய தீபகற்பத்தில் சகோதர உறவுகள் வலுப்பெறும் நாள் நெருங்கி, நீடித்த அமைதிக்கான சூழ்நிலையை உருவாக்கக்கூடிய உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தின் பாதைகளைத் திறக்கும்.

தாழ்ச்சியான குழந்தையாக மாறிய கடவுளின் மகன், அமெரிக்க கண்டத்தில் உள்ள அரசியல் அதிகாரிகளையும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களையும் ஊக்குவிக்கட்டும், இதனால் சமூக மற்றும் அரசியல் கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கும், வறுமையின் வடிவங்களுக்கு எதிராகப் போராடுவதற்கும் பொருத்தமான தீர்வுகளைக் காணலாம்.

கிறிஸ்து பிறப்பு குடிலிலிருந்து குழந்தை யேசு நம்மிடம் குரல் இல்லாதவர்களின் குரலாக இருக்க வேண்டும் என்று கேட்கின்றார். தண்ணீர் மற்றும் உணவுப்பற்றாக்குறையால் இறந்த அப்பாவிகளின் குரல், வேலை கிடைக்காதவர்கள் அல்லது வேலையை இழந்தவர்களின் குரல், மிகவும் சோர்வான பயணங்களில் தங்கள் உயிரைப் பணயம் வைத்தவர்களின் குரல், சிறந்த எதிர்காலத்தைத் தேடி  சொந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் குரலாக நாம் இருக்கக் கேட்கின்றார் பாலன் இயேசு.

சகோதர சகோதரிகளே, இன்னும் ஒரு வருடத்தில் கடவுளின் அருள் மற்றும் நம்பிக்கையின் நேரம் நெருங்கி வருகிறது என்பதை எடுத்துரைக்கும் யூபிலி ஆண்டு தொடங்க உள்ளது. இந்த தயாரிப்பு காலமானது போருக்கு “இல்லை” என்றும் அமைதிக்கு “ஆம்” என்றும் கூறும் வகையில் நமது இதயத்தை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகும்; எசாயா இறைவாக்கினர் கூறியது போல், ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்

இந்த வார்த்தைகள் இன்று பெத்லகேமில் பிறந்த இயேசுவில் நிறைவேறியது. அவரை நம் உள்ளங்களில் வரவேற்போம். மீட்பரும், அமைதியின் இளவரசருமான அவருக்கு நம் இதயத்தைத் திறப்போம்!

இவ்வாறு தனது ஊர்பி எத் ஓர்பி எனப்படும் ஊருக்கும் உலகுக்குமான சிறப்பு செய்தியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது சிறப்பு ஆசீரை அனைவருக்கும் வழங்கினார். அத்துடன் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களையும் எடுத்துரைத்தார்.

இந்த ஆசீரை மிகுந்த மரியாதையோடும், பக்தியோடும், ஆன்மீகத் தயாரிப்புக்களோடும் பெறுகின்றவர்களுக்கு நிறைபேறு பலன் உள்ளது. இந்தப் பலனை, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் இருப்பவர்கள் மட்டுமன்றி, இதில் நேரடியாகப் பங்குகொள்ள இயலாமல், வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் வழியாக இதைப் பெறுபவர்களுக்கும் இப்பலன் உண்டு என்பது, 1985ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. வத்திக்கான் சுவிஸ் கார்ஸ்ட்ஸ் அமைப்பும், இத்தாலிய இராணுவமும், தேசியப் பண்களைப் பாடி, திருத்தந்தைக்கு மரியாதை செலுத்தியது.