13 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே கூட்டணியில் : அச்சமடைந்துள்ள ரணில் விக்ரமசிங்க

சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே கூட்டணியில் இணைந்துள்ளமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அச்சமடைந்துள்ளதாக அந்த கட்சியின் நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு நாவல பிரதேசத்தில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கட்சியின் 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே கூட்டணியில் இணைந்துள்ளதன் காரணமாக அச்சமடைந்துள்ள ஜனாதிபதி கட்சியை பிளவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சுதந்திர மக்கள் காங்கிரஸூக்குள் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் ரணில்-ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிக்க எதிர்க்கட்சி சக்திகளுடன் கூட்டணி அமைப்பதை தாமதிக்கக் கூடாது. அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தில் பிரதமர் பதவியை பெற வேண்டும் என்று கனவு காணும் இரண்டு மூன்று பேர் சுதந்திர மக்கள் காங்கிரஸிலும் இருக்கக்கூடும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.