லிபியா கடலில் மூழ்கிய படகு- 61 பேர் உயிரிழப்பு.
லிபியா கடற்கரையில் 86 புலம்பெயர்ந்த மக்களைக் கொண்ட படகு ஒன்று விபத்துக்குள்ளானது.
அதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 61 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஐ.நாவின் புலம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதே அமைப்பு தெரிவித்துள்ளது.
லிபியாவில் உள்ள ஐநாவின் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில், அந்தப் படகு கடற்கரை நகரமான சுவாராவிலிருந்து 86 பேருடன் கிளம்பியதை உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதி உலகின் ஆபத்தான புலம்பெயர்வு வழிகளில் ஒன்றாக தொடர்கிறது என ஐ.நா தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள், லிபியாவின் எல்லை வழியாக புலம்பெயர்கின்றனர். அதில் பலர் கடலில் இதுபோன்ற விபத்துக்களைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது.
ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மத்திய தரைக்கடல் பகுதியில் மட்டும் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆண்டு இறந்துள்ளனர் அல்லது தொலைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை உலகின் மற்ற பகுதிகளில் இதைவிட அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.