பாதாள உலகக் குழுக்களை முழுமையாக ஒழிக்க தீவிர நடவடிக்கை-பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்.

பாதாள உலகக் குழுக்களை முழுமையாக ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘‘43 பொலிஸ் குழுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பாதாள உலகை ஒழிக்க வேண்டுமானால் தென் மற்றும் மேல் மாகாணங்களை கட்டியெழுப்ப வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் பாதாள உலகத்தை அழிப்போம். எதிர்வரும் ஜனவரி மாதத்தின் பின்னர் பாதாள உலகத்துடன் தொடர்புடைய 1091 பேர், போலி கடவுசீட்டுகளுடன் விமான நிலையத்துக்குச் செல்ல முடியாத நிலைமை உருவாகும்.‘‘ என்றும் அவர் கூறியுள்ளார்.

திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.