நொத்த-டாம் மாதா கோவில் கூரையின் உச்சியில் தங்கச் சேவல் பிரதிஷ்டை!
பாரிஸ் பேராயரது ஆசியுடன் நடைபெற்ற முக்கிய நிகழ்வு
பாரிஸில் மீளப் புத்துயிர் பெற்றுவரும் நொத்த-டாம் மாதா தேவாலயத்தின் கூம்புக் கூரையின் உச்சியில் தங்கச் சேவல் (coq de Notre-Dame de Paris) சிலையைப் பிரதிஷ்டை செய்யும் மத வைபவம் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றிருக்கிறது.
புதிய சிலையை பிரெஞ்சு வரலாற்று நினைவுச்சின்னங்களின் தலைமைக் கட்டடக் கலைஞர்,பிலிப் வில்னுவ் (Philippe Villeneuve) வடிவமைத்துள்ளார்.
கத்தோலிக்க விழிப்புணர்வு மற்றும் இயேசுவின் மீள் வருகையைக் குறிக்கின்ற புனிதச் சின்னமாகிய அந்தச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்பாகப் பாரிஸ் பேராயர் (Monseigneur Laurent Ulrich) ஆசித் திருப்பலி பூசையை நடத்தினார்.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அவருக்கு அணிவிக்கப்பட்ட முள் முடி எனக் கூறப்படுகின்ற கிரீடத்தின் ஒரு சிறு பாகம் உட்பட வரலாற்று முக்கியத்துவம் மிக்க புனிதப் பொருள்கள் சில இந்தச் சேவல் சிலையின் உள்ளே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
பாரிஸ் நகரில் வரலாறு – பண்பாடு – மதம் சார்ந்த மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகிய இந்தத் தேவாலயம் 2019 ஏப்ரலில் திடீரெனத் தீக்கிரையாகி அதன் வானளாவிய கோபுரக் கூரை எரிந்து சாம்பராகி வீழ்ந்த சம்பவம் உலகெங்கும் பெரும் உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியமை நினைவிருக்கலாம். இந்த விபத்தில் கூரையின் உச்சியில் இருந்த வெண்கலச் சேவல் சிலையும் சேதங்களுடன் மீட்கப்பட்டிருந்தது.
தேவாலயத்தை அதேபோன்ற கட்டடக் கலை மற்றும் வடிவமைப்பில் மீளப் புதுப்பித்து நிர்மாணிக்கின்ற வேலைகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆலயம் கிட்டத்தட்ட அதன் முந்திய நிலைக்கு உயிர்பெறுவதைக் குறிக்கின்ற முக்கிய கட்டங்களில் ஒன்றாகக் கூரைக் கோபுர உச்சியில் – தரையில் இருந்து 96 மீற்றர்கள் உயரத்தில்- கத்தோலிக்கப் புனிதப் பொருள்கள் உள்ளடங்கிய சேவல் சிலையை நிறுவுகின்ற பணி இன்று பூர்த்தியாகி இருக்கிறது.
படம் :தேவாலயக் கூரையில் ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலம் கொலுவிருந்த பழைய வெண்கல சேவல் சிலை. – – – – – – – – –
கூரையில் நிறுவப்பட்டிருந்த பழைய வெண்கலச் சேவல் சிலைக்குப் பதிலாகவே இப்போது தங்கச் சேவல் சிலை மாற்றீடு செய்யப்பட்டுள்ளது.
தீ விபத்தின் சேதங்களுக்கு நடுவே இருந்து மீட்கப்பட்ட பழைய சிலைக்குள் பேணி வைக்கப்பட்டிருந்த புனிதப் பொருள்கள் அனைத்தும் பாதுகாப்பாக எடுக்கப்பட்டுப் புதிய தங்கச் சிலைக்குள் வைக்கப்பட்டுள்ளன.
சேதமடைந்த பழைய சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
புதிய சிலை பாரிஸ் வானில் எழுகின்ற காட்சிகளைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியுள்ளன. புனருத்தாரணம் செய்யப்பட்ட மாதா தேவாலயம் அடுத்த ஆண்டு டிசெம்பரில் புனித பாப்பரசரால் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.