சஜித்துடன் கூட்டு சேரும் டலஸ் அழகப்பெரும.

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான ‘சுதந்திர மக்கள் பேரவை’யின் முக்கிய நான்கு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கலாநிதி நாலக கொடஹேவா, பேராசிரியர் சன்ன ஜயசுமண, டிலான் பெரேரா ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து கொழும்பு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இது குறித்து எமது சகோதர ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த கலாநிதி நாலக கொடஹேவா, சுதந்திர மக்கள் பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் ஒரு பரந்த அரசியல் கூட்டணியை அமைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் முன்னணி தற்போது சுயாதீனமாக செயற்படுகின்றது.

இந்நிலையில், அரசாங்கத்தில் இருந்து பிரிந்துள்ள மற்றைய குழுவான “மேலவை இலங்கை கூட்டணியுடன்” இணைந்து இவ்வாறான இராஜதந்திர தீர்மானத்தில் சுதந்திர மக்கள் முன்னணி இறங்கவுள்ளது.

இது குறித்து “மேலவை இலங்கை கூட்டணியின்” பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிடம் கேட்ட போது, சஜித் தரப்புடன் இணைவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றார்.

பாராளுமன்றத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், எதிர்கால அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.