போல் எம்புளுவா பெயர் மாறுகிறது புதிய அடையாளச் சின்னம் வெளியீடு.

ஜனவரி மாதம் முதல் "பிரான்ஸ் திறவாய்"

 

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பிரான்ஸில் வேலை தேடுவோரது நலன்களைக் கவனித்து வருகின்ற ‘போல் எம்புளுவா’ (Pole Emploi) என்கின்ற அரச நிறுவனத்தின் பெயர், அடையாளச் சின்னம் என்பன மாற்றம் பெறுகின்றன.

புத்தாண்டில் ஜனவரி மாதம் முதல் அதன் பெயர் “பிரான்ஸ் திறவாய்” (France Travail) என்று மாற்றப்படுகிறது.

அதன் அடையாளச் சின்னமும் மேலே படத்தில் காணப்படுவது போன்று புதிய வடிவத்துக்கு மாறுகின்றது.

பிரான்ஸில் நாடெங்கும் உள்ள அதன் அலுவலகங்கள் 2024 முதல் புதிய பெயர் மற்றும் சின்னத்துக்குப் (logo) படிப்படியாக மாற்றப்படும் என்று தொழில் அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

தற்சமயம் “போல் எம்புளுவா” என அழைக்கப்படுகின்ற வேலை தேடுவோரது அலுவலகம் 2003 ஆம் ஆண்டுக்கு முன்னர் ANPE என்ற பெயருடன் இயங்கி வந்தது.

புதிதாக வேலை தேடுவோர், வேலை இழந்த பின்னர் புதிய தொழில் தேடுவோர், அவர்களுக்கான பயிற்சி மற்றும் நடைமுறைகள் கொடுப்பனவுகள் போன்ற முக்கிய தொழில் விவகாரங்களைக் கையாள்கின்ற இந்த நிறுவனத்துக்கு நாடெங்கும் சுமார் 43 ஆயிரம் முகவர் நிலையங்கள் உள்ளன.