வற் வரி அதிகரிப்பு- அதிகரிக்கும் வாகன உதிரி பாகங்களின் விலை.
வற் வரி 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகன உதிரி பாகங்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வடையும் என வாகன உதிரி பாகங்கள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாகன உதிரி பாகங்களின் விலைகள் இருமடங்காக அதிகரிக்கும் எனவும் இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வற் வரி அதிகரிப்பு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், சில விநியோகஸ்தர்கள் தற்போதே வாகன உதிரிபாகங்களை அதிக விலைக்கு விற்பனையாளர்களுக்கு வழங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மாத விலையை விட சில உதிரி பாகங்களின் விலைகள் இம்மாத இறுதியில் பாரிய அளவில் உயர்வடைந்துள்ளன. 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட உதிரி பாகமொன்றின் விலை தற்போதே 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக வாகன உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஜனவரி முதல் இதனையும்விட பல மடங்கு விலைகள் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் வாகன உரிமையாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
வாகன உதிரிபாகங்களின் விலைகள் அதிகரிப்பதால் வாகனங்கள் சரியான நேரத்தில் பழுதுபார்க்க முடிவதில்லை என கூறும் வாகன உரிமையாளர்கள், இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
2020ஆம் ஆண்டு முதல் புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்னமும் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படவில்லை. சில அத்தியாவசியமான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாகன உதிரி பாகங்களின் விலைகளும் அதிகரித்து வருவதால் வாகங்களை பராமரிப்பதில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன.