பிரித்தானியாவில் இடம்பெற்ற சாலை விபத்தில் இலங்கை மாணவர் பலி.

பிரித்தானியாவின் – நொட்டிங்ஹாம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அண்மையிலேயே பிரித்தானியா சென்றுள்ளார்.

பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தில் 31 வயதான ஓஷத ஜயசுந்தர என்ற மாணவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை அதிகாலையில் நாட்டிங்ஹாம் நகர மையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் 27 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக கவனக் குறைவாக வாகனம் ஓட்டியமை மற்றும் மரணத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

விபத்து நடந்தப் பகுதியில் ஏராளமான மாணவர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அந்தப் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை நேரில் கண்ட பலர் சாட்சியம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து, விபத்து தொடர்பான காணொளிகளை வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓஷத ஜயசுந்தர கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.