உறங்கும் வசதியுடன் பாரிஸ் – பேர்ளின் இரவு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

பயணப் பதிவு மும்முரம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பிரான்ஸ் – ஜேர்மனி தலைநகரங்கள் இடையே சுமார் பத்து ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாகப் படுக்கை வசதியுடன் கூடிய இரவு ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

பாரிஸ் நகருக்கும் பேர்ளினுக்கும் இடையே முதலாவது சேவை நேற்று முன்தினம் திங்கட்கிழமை தொடங்கியது. முதற்கட்டமாக வாரத்தில் மூன்று நாட்கள் நடத்தப்படவுள்ள இந்தச் சேவை பின்னர் புத்தாண்டின் இறுதியில் தினசரி சேவையாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜேர்மனியின் தேசிய பொதுப் போக்குவரத்து நிறுவனமாகிய டொச் பான்(Deutsche Bahn), பிரான்ஸின் அரச ரயில் சேவை நிறுவனமாகிய SNCF ஆகிய இரண்டினதும் இணைந்த திட்டமாக இந்த இரவு ரயில் சேவை ஏற்பாடாகியுள்ளது. ஒஸ்ரியா நாட்டின் ரயில் போக்கு நிறுவனத்துக்கு சொந்தமான‘நைற்ஜெற்’ வகை (Nightjet brand) ரயில்களே இந்தச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சுமார் 15 மணிநேரம் நீடிக்கும் இரவுப் பயணத்துக்கான கட்டணம் 30 ஈரோக்களில் இருந்து தொடங்குகிறது. நத்தாரை ஒட்டி இந்த மாதம் முழுவதுக்குமான பயணப் பதிவுகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டன என்று டொச் பான் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் குறுந்தூர விமான சேவைகளைப் பல நிறுவனங்கள் போட்டிபோட்டுத் தொடங்கியதை அடுத்து இவ்வாறான இரவு ரயில் சேவைகள் சில தசாப்த காலமாகச் செல்வாக்கிழந்து தடைப்பட்டுப் போயிருந்தன. தற்சமயம் சுற்றுச் சூழல் பாதிப்புகளைக் கவனத்தில் கொண்டு விமான சேவைகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்பட்டுவதால் நகரங்கள் இடையே இரவு ரயில்களை இயக்குவதில் ஆர்வம் எழுந்துள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">